கேரளாவில் ஓணம் பண்டிகை வெகுவிமர்சையாக 10 நாட்கள் கொண்டாடபட்டு வருகிறது. இதை அடுத்து கேரள எல்லையை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்தில், மலையாள மக்கள் அதிகம் வசித்து வரும் பகுதிகளில் ஓணம் பண்டிகை கொண்டாடபடுவது வழக்கம். எனினும், கொரோனா நோய் தொற்று ஊரடங்கால், கடந்த இரண்டு ஆண்டுகள் ஓணம் பண்டிகை கேரளாவை போல் குமரியிலும் களையிழந்து காணபட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைகட்ட துவங்கி, இன்று திருவோணம் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மீனச்சல், குழித்துறை, ஆற்றுர் உள்ளிட்ட பகுதிகளில் மலையாள மொழி மக்களின் கலாசார நிகழ்ச்சிகளான மோகினியாட்டம், திருவாதிரைகளி, வள்ளங்களி, தெய்யம் , சிங்காரி மேளம் ஆகிய நிகழ்ச்சிகள் மற்றும் ஊர்வலங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மாவேலி மன்னர் வேடம் பூண்டு வீடு வீடாக மக்களுக்கு ஓணம் வாழ்த்துக்கள் கூறி மகிழ்விக்கும் ஊர்வலன்களும் நடைபெற்று வருகிறது.
இதே போல் கோவில்கள் , பொது இடங்கள், வீடுகளில் அத்தப்பூ போட்டியும் நடைபெற்றது. மேலும் மதியம் ஓண சத்திய என்ற அறுசுவை உணவு குடும்பங்கள் ஒன்றிணைந்து சாப்பிடுவதும் முக்கியமான நிகழ்வாக வீடுகளில் நடைபெறும். மேலும் கொரோனா நோய் தொற்றால் இரண்டு ஆண்டுகள் ஓணம் பண்டிகை முடங்கிய நிலையில், இந்த வருடம் ஓணம்பண்டிகை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். குமரி மாவட்டத்திற்கு திருவோணம் பண்டிகையை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பேட்டி : சூர்யா – குழித்துறை