கேப்டன் விமர்சனம்: பிரிடேட்டர், ஏலியன் ஆர்மியே உயிர்கொள்… ஆர்யாவின் மிஷன் சக்சஸ் ஆகிறதா?

காட்டுக்குள் யாரையும் உள்ளே விடாத விசித்திர ஜந்துவை ராணுவ கேப்டன் ஆர்யா எப்படி விரட்டி விரட்டி அடிக்கிறார் என்பதுதான் ‘கேப்டன்’ படத்தின் ஒன்லைன்.

உறவினர்கள் யாரும் இல்லாத தனி மரமான ஆர்யாவுக்கு தன் டீமிலிருக்கும் சக ராணுவ வீரர்கள்தான் எல்லாமே. வடகிழக்கு மாநிலத்தில் ஒரு மிஷனை வெற்றிகரமாக முடித்துவிட்டு, செக்டர் 42 என ஆள் நடமாட்டமில்லாத ஒரு இடத்திற்கு மற்றொரு மிஷனுக்காக அவரின் குழு செல்கிறது. அங்கே ஏற்கெனவே அமானுஷ்யம் தலைதூக்கியிருக்க, குழுவில் இருக்கும் ஹரிஷ் உத்தமன் கேப்டன் ஆர்யாவையே சுட முயன்று பின்னர் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார். மீண்டும் அதே மிஷனுக்கு ஓராண்டுக்குப் பிறகு சிம்ரன் தயவால் செல்கிறது ஆர்யாவின் பழைய டீம். ஹரிஷ் உத்தமன் ஏன் அப்படிச் செய்தார், அந்தக் காட்டில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் என்னென்ன என்பதைச் சொல்கிறது இந்த ‘கேப்டன்’.

கேப்டன் விமர்சனம்

ஆர்யா, சிம்ரன், ஹரிஷ் உத்தமன், கோகுல், ஐஷ்வர்யா லட்சுமி, ஆதித்ய மேனன், காவியா ஷெட்டிம, மாளவிகா அவினாஷ் எனப் படத்தில் நமக்குத் தெரிந்த முகங்கள் பல. ஆனால், அதில் யாதொரு கதாபாத்திரமும் சுவாரஸ்யமாக எழுதப்படாததால், பெரிய அளவில் சோபிக்க மறுக்கிறார்கள். ஹரிஷ் உத்தமன் வேடத்தில் மட்டுமே குறைந்தபட்சமான எமோசன் எட்டிப் பார்க்கிறது. ஐஷ்வர்யா லட்சுமி அந்தப் பெட்டியை ஆர்யாவிடம் கொடுக்கும்போதே, எல்லாம் நமக்குத் தெரிந்துவிட, ஆனாலும் அதையும் ஒரு இறுதி ட்விஸ்ட் எனக் காட்சிகள் வைத்திருக்கிறார் இயக்குநர். விஞ்ஞானியாக வரும் சிம்ரனின் கதாபாத்திரம் குறித்து போதிய தெளிவு எதுவுமில்லை. அவருக்கு எப்படி அத்தனை அதிகாரம் என்பதற்கும் நம்பும்படியான காரணங்கள் இல்லை.

ஆனால், இதையெல்லாம் மீறிய ஒரு பிரச்னை படத்தில் இருக்கிறது. அந்த விநோத உயிரினத்தை யார் இப்படியொரு கெட்டப்பில் வடிவமைத்தார்கள் என்றே தெரியவில்லை. பிரிடேட்டர், ஏலியன் என நாம் பல ஆண்டுகளாக ஹாலிவுட்டில் பார்த்துப் பழகிப் போன உயிரினத்தின் மோசமான பிரதியைப் போல அதை வடிவமைத்திருக்கிறார்கள். அது அதிகபட்சமாகச் செய்யும் ஒரே விஷயம், மனிதர்களைப் பிடித்து அவர்கள் முகத்தில் எச்சிலை உமிழ்வது மட்டும்தான். ஆனால், அதைத்தாண்டி அது ஒரு சாதுவான உயிரினம், அவ்வப்போது சண்டையிடும், அதிலும் யாருக்கும் பெரிய அளவில் ஒரு சேதமும் இருக்காது. மூன்று மூன்று மணி நேரங்களாகக் கதையைச் சட்டென நகர்த்தி, பின்னர் ரிவர்ஸ் கீர் போட்டு விளக்கம் சொல்ல மட்டுமே அதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

கேப்டன் விமர்சனம்

போதாக் குறைக்கு சர்க்கஸ் கூடாரங்களில் போதிய உணவில்லாமல் பாவமாய் நிற்கும் ஒட்டகங்களைவிட மோசமான நிலையில் அந்த உயிரினங்கள் திரையில் உலா வருகின்றன. இடைவேளையின் போது வாங்கி வைத்த பாப்கார்னை அந்த உயிரினத்துக்குத் தரும் அளவு நமக்கே ஜீவகாருண்யம் எட்டிப் பார்க்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்’ என்கிற பாரதியின் கூற்றை விடாமல் பின்பற்றுபவர்களில் சக்தி சௌந்திரராஜன் அதிமுக்கியமானவர். ஹாலிவுட்டில் ஹிட்டடித்த பல விதமான படங்களைத் தமிழ் மொழிக்குக் கொண்டு வந்ததில் பெரும் பங்கு அவருக்கு உண்டு. ஜாம்பிகள் என்றால் ‘மிருதன்’, பொம்மைக்கு உயிர் வந்தால் ‘டெடி’, ஸ்பேஸ் த்ரில்லர் என்றால் ‘டிக் டிக் டிக்’ என்ற வரிசையில் இந்த முறை ஏலியன்/பிரிடேட்டர் கதைகளோடு வந்திருக்கிறார்.

கேப்டன் விமர்சனம்

ஆனால், இரண்டு மணி நேரத் திரைக்கதையில் பல விஷயங்கள் வெறுமனே சம்பிரதாயக் காட்சிகளாக மட்டுமே நகர்கின்றன. அதிலும் ‘3 hours later’, ‘The missing three hours’ பாணி திரைக்கதை படத்திற்கு எந்த விதத்திலும் வலு சேர்க்கவில்லை. இமானின் இசையில் யுவன் பாடும் பாடல் மட்டும் ஓக்கே. பின்னணி இசையில் சில படங்கள் நினைவுக்கு வருகின்றன. பாடல்கள், காமெடி என நம்மைப் பெரிய அளவில் சோதிக்காமல் கிரிஸ்ப்பான 2 மணி நேர சினிமாவாகத் தந்த படத்தொகுப்பாளர் பிரதீப் E.ராகவுக்கு நன்றி.

`கேப்டன்’ என்னும் பெயரில் இருக்கும் கனமாவது படத்திலிருந்திருக்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.