திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையையொட்டி 5 நாட்களில் மட்டுமே 324 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனை நடைபெற்றிருக்கிறது. கேரளாவின் மிக முக்கிய பண்டிகையான ஓணம், மலையாள மக்களால் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று ஓணம் பண்டிகை என்றாலும், இம்மாத தொடக்கத்தில் இருந்தே கேரள மது பிரியர்கள் பண்டிகையை கொண்டாட தொடங்கிவிட்டனர். இதனால் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கி செப்டம்பர் 4ம் தேதி வரை 324 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதாக கேரள மாநில மதுபான கழகம் தெரிவித்துள்ளது. விஸ்கி, பிராந்தி, பீர் வகைகளை சேட்டன்கள் அதிகளவு வாங்கி சென்றனர்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 248 கோடி ரூபாய்க்கு மட்டும் மது விற்பனை நடைபெற்றிருந்ததாக அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 30 விழுக்காடு மது விற்பனை கூடியுள்ளது. இந்த ஆண்டு ஓண திருவிழா நாட்களில் மட்டுமே மொத்தமாக 700 கோடி ரூபாய்க்கு மதுபான வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக கேரள மதுபான கழகம் கூறியுள்ளது. ஓணம் பண்டிகையையொட்டி நடைபெற்ற மது விற்பனையின் முழு விவரம் வருகின்ற 11ம் தேதி வெளியிடப்படுகிறது.