காந்திநகர்: பில்கிஸ் பானு வழக்கில் நன்னடத்தை அடிப்படையில் சிறையில் இருந்து விடுதலையான 11 பேரும் மீண்டும் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் சொந்த கிராமத்தை விட்டு ஓடியுள்ளனர். இதுபற்றிய முழுவிபரம் வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு சபர்மதி ரயில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக கலவரம் வெடித்தது.
இதில் குஜராத்தின் பல இடங்களில் கோரத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கூட்டு பலாத்காரம்
இந்த கலவரத்தின் ஒருபகுதியாக மார்ச் 3ல் தஹோத் மாவட்டத்தில் உள்ள ரந்திக்புர் கிராமத்தில் கலவரம் வெடித்தது. அப்போது 30 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பில்கிஸ் பானுவின் குடும்பத்தினரை கொடூரமாக தாக்கியது. இதில் 7 பேர் கொலை செய்யப்பட்டனர். கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்த வழக்கை சிபிஐ விசாரித்தது. மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் 2008 ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் இவர்களின் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து அவர்கள் 11 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
11 பேரும் விடுதலை
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரும் குஜராத் அரசு பொதுமன்னிப்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்ததாலும், குற்ற தன்மையை கருத்தில் கொண்டும் விடுவிக்க ஆணை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து தண்டனை பெற்ற 11 பேரும் கோத்ரா துணைச் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆரத்தி எடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
11 பேரின் விடுதலை தொடர்பாக பாஜகவினரை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள், பெண்ணியவாதிகள் கடுமையாக விமர்சித்தனர். மேலும் 11 பேர் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இதனை விசாரிக்க நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேலும் 11 பேர் விடுதலை செய்யப்பட்டது குறித்து விளக்கமளிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கிராமத்தை விட்டு வெளியேறிய 11 பேர்
இந்நிலையில் தான் 11 பேரும் மீண்டும் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் செந்த கிராமத்தில் இருந்து வெளியேறி உள்ளனர்.தோஹாத் மாவட்டத்தில் உள்ள ரந்திக்பூர் கிராமத்தில் இருந்து அவர்கள் வெளியேறி உள்ளனர். இதுபற்றி விசாரித்தபோது, சிறையில் இருந்து வெளியான நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் பயந்துபோய் இருந்ததாகவும், தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தங்களிடம் சண்டையிட்டு பொய் வழக்குகளில் மீண்டும் சிக்க வைக்கலாம் என நினைத்து அவர்கள் கிராமங்களை விட்டு வெளியேறி உள்ளது தெரியவந்துள்ளது.
காரணம் என்ன?
ரந்திக்பூர் கிராமத்தில் வசித்த சைலேஷ் பட், மிதேஷ் பட், ராதேஷ்யாம் ஆகியோரின் வீடுகள் பூட்டப்பட்டுள்ளன. இவர்கள் கைது பயத்தில் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். மேலும் பாகாபாய் என்பவரின் வீட்டில் அவரது மனைவி மங்லி பென் மட்டும் உள்ளார். அவர் இல்லை. இதுபற்றி மங்லி பென் கூறுகையில், ‛‛நாங்கள் தற்போது மூன்று வேளை உணவுக்கே கஷ்டப்பட்டு வருகிறோம். இங்குள்ள பண்ணையில் கூலி வேலை செய்து வருகிறேன். இந்த பண்ணை முஸ்லிம்களுக்கு சொந்தமானது. தற்போது என்னை வேலையில் இருந்து நிறுத்திவிட்டனர். தற்போது தினமும் ரூ.100 சம்பாதிப்பதே சிரமமாக உள்ளது. மேலும் என் கணவர் சிறையில் இருந்த வந்தபோது என்கணவரை படம், வீடியோ எடுத்தனர். இதனால் பயம் ஏற்பட்டது. பொய்யான வழக்குகளில் சிக்க வைப்பார்கள் என்ற அச்சம் இருந்தது. இதனால் கிராமத்தை விட்டு 11 பேரும் வெளியேறி உள்ளனர். பத்திரிகையில் கூறுவது போல் கிராமத்தில் ஊர்வலம் எதுவும் நடைபெறவில்லை. பயம் இருந்தாலும் கூட வகுப்புவாத பிரச்சனை ஏற்படும் நிலை இல்லை. அனைவரும் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம்.
டாக்டர் கூறுவது என்ன?
இதுபற்றி மருத்துவரான நிலேஷ் பமானியா கூறுகையில், ‛‛கிராமத்தில் அமைதி நிலவுகிறது.குற்றவாளிகளை வரவேற்கும் வகையில் ஊர்வலம் எதுவும் நடைபெறவில்லை. சர்வதேச மற்றும் தேசிய செய்திகளில் எதிர்மறையான விஷயங்களை மட்டுமே கேட்கிறோம். இந்த 11 பேரும் வீட்டிற்கு வந்தது ஊடக அறிக்கை மூலம் எங்களுக்கு தெரியவந்தது. எனது வீடு பிரதான சாலையில் உள்ளது. ஊர்வலம் நடந்திருந்தால் நிச்சயம் எனக்கு தெரியவந்திருக்கும். பயத்தின் காரணமாக 11 பேரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளன. பிற சமூகத்தை சேர்ந்தவர்கள் பொய் வழக்குகளில் சிக்க வைப்பார்கள் என்று அஞ்சினார்கள்” என்றார்.