சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் 81 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் முடிவடைந்த பின்னர் வாக்கெடுப்புக் கோரியிருந்தார். இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 91 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
குழுநிலை அமர்வின்போது சட்டமூலத்தில் திருத்தங்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதுடன், மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் கொவிட் 19 தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறையாக 2022 வரவுசெலவுத்திட்டத்தில் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை வரி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. வருடமொன்றில் கூட்டுமொத்தம் நூற்றியிருபது மில்லியன் ரூபாவை விஞ்சிய இறக்குமதியாளர், உற்பத்தியாளர், சேவை விநியோகஸ்தர் மற்றும் மொத்த விற்பனையார் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் மொத்த விற்பனை வரவின்மீது 2.5 வீதம் வரியாக விதிக்கப்படும். இந்த வரியினால் எதிர்பார்க்கப்பட்டுள்ள வருடாந்த வருமானம் 140 பில்லியனாகும்.
சட்டமூலம் 2022 யூன் 21ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டதுடன், அப்போதைய நிதியமைச்சரினால் 2022ஆம் யூலை 06ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதேவேளை, இன்றையதினம் கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலம் இரண்டு மற்றும் வேலையாட்களின் தொழிலை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் என்பனவும் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டன.