சமூக ஊடகம் என்பது தற்போது பரந்துபட்ட ஒரு தளமாக மாறிவருகிறது. பிரபலங்கள் நடிகர்களைத் தாண்டி, தங்களுடைய திறமையால் ஃபேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற கணக்குகளில் தங்களுக்கென தனி ஃபாலோயர்களை பலரும் கொண்டுள்ளனர். இப்படி சமூக வலைதளத்தில் அதிகப்படியான ஃபாலோயர்களைக் கொண்டிருப்பவர்களை `இன்ப்ளூயன்சர்’ என அழைப்பதுண்டு.
இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பதால், சில நிறுவனங்கள், இவர்களை அணுகி பொருள்களை விளம்பரப்படுத்துமாறு கேட்பதுண்டு. பணத்தைப் பெற்றுக் கொண்டு இவர்களும், அந்தப் பொருள்களை உபயோகித்து தாங்கள் பயனடைந்தது போல பதிவுகளை வெளியிடுவார்கள். இதைப் பார்க்கும் அவர்களின் ஃபாலோயர்களும் அந்தப் பொருள்களை வாங்கி உபயோகிப்பார்கள்.
இதில் சிக்கல் என்னவென்றால், விளம்பரப்படுத்தப்படும் பொருள்கள் போலியானதா, நம்பகத்தன்மை உடையதா, அதனால் ஏதாவது பின்விளைவுகள் ஏற்படுமா என்பதையெல்லாம் ஆராயாமல், பலரும் இது போன்ற பொருள்களுக்காக நடித்து, பதிவுகளை வெளியிடுகின்றனர்.
இவர்களுக்கு இதுவரை எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாதிருந்த நிலையில், தற்போது இத்தகைய இன்ப்ளூயன்சர்களுக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் இது குறித்தான வழிகாட்டுதல் பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிறகு இன்ப்ளூயன்சர்கள் தாங்கள் எந்த பிராண்டிடமிருந்து பணம் பெற்று, தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகிறார்கள் என்பதைக் கட்டாயமாகப் பகிரங்கமாகத் தங்களுடைய பதிவில் வெளியிட வேண்டும். அதோடு அந்தப் பதிவில் பொறுப்பு துறப்பு குறித்த அறிவிப்பையும் பதிவிட வேண்டும் என்பது போல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. அதேபோல் இ-காமர்ஸ் தளங்களில் வெளிவரும் போலியான மதிப்பீடுகளைத் தடுப்பதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கும் பணியிலும் நுகர்வோர் விவகாரத்துறை ஈடுபட்டுள்ளது.
நுகர்வோரின் நலனை பாதுகாக்க இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.