புதுடில்லி: தலைநகர் டில்லியில், 106 கழிப்பறைகள், 16 நிரந்தர பாலங்கள், 140 புதிய மரங்களுடன் ரூ.477 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட ‘சென்ட்ரல் விஸ்டா அவென்யூவை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை திறந்து வைக்க உள்ளார்.
”சென்ட்ரல் விஸ்டா” திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு கடந்த 2020ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். டில்லி இந்தியா கேட் முதல் ஜனாதிபதி மாளிகை வரையிலான ராஜ்பாதையில் புதிய பார்லிமென்ட் கட்டடம், பிரதமர், துணை ஜனாதிபதி இல்லங்கள், மத்திய அரசின் செயலகம் உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
அதில், இந்தியா கேட் முதல் விஜய் சவுக் வரையிலான 3 கி.மீ., தூரப்பகுதியில் சென்ட்ரல் விஸ்டா அவென்யூ என்று அழைக்கப்படுகிறது. சிவப்பு கிரானைட் கற்கள் பதியப்பட்ட நவீன நடைபாதை, கால்வாய்கள், பாலங்கள் என பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. சென்ட்ரல் விஸ்டா திட்ட கட்டுமான பணிகள் முழு வீச்சில் செயல்பட்டு வந்தன.
கடந்த 2019 பிப்.,ல் இங்கு கட்டுமானம் துவங்கியது முதல் அங்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த பகுதி சுற்றுலா பயணிகளுக்கு விருப்பமான இடமாக இருந்தது. ராஜபாதையின் பெயர், தற்போது கர்தவ்யா ( கடமை) பாதை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மறுசீரமைக்கப்பட்டதற்கு பிறகு, தற்போது அந்த பகுதியானது, பாதசாரிகளுக்கு ஏற்றதாகவும், முன்பை விட அதிக இடம் கொண்டதாகவும் உள்ளது. விஜய் சவுக் முதல் இந்தியா கேட் வரையிலான பாதையில், சீரான இடைவெளிகளில் கால்வாய்கள் மேல் பாலம் மற்றும் இருக்கைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. மேலும் 16.5 கி.மீ., புதிய நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதியில் ஏற்கனவே இருந்த மணல் பாதைகள் அகற்றப்பட்டு கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்தியா கேட் சாலையின் ஓரங்கள், கால்வாய்களை சுற்றியும், புற்களை சுற்றியும் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடை பாதைகள், நிறுத்தும் இடங்களை மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பாதையில், முன்பு இல்லாத வகையில் தற்போது 106 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 64 பெண்களுக்காகவும், 32 ஆண்களுக்காகவும் கட்டப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் 10 கழிப்பறைகள் உள்ளன.
சிறுநீர் கழிக்க 98 இடங்களில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே குடிநீர் வசதியும் உள்ளது.
ராஜபாதையில் இருந்த வரலாற்று சிறப்பு மிக்க மின்கம்பங்கள், தேவையான வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் அங்கேயே நிறுவப்பட்டுள்ளது. மரங்கள், கால்வாய்கள், வாகன நிறுத்தும் இடங்கள், இந்தியா கேட் அருகே என 900 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் 74,900 சதுர கி.மீ., கால்வாய்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் எளிதாக அதனை கடக்கும் வகையில் 16 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பல வகையான புற்கள் நடப்பட்டு 101 ஏக்கர் புல்வெளி நிலம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இவை தண்ணீர் தெளிக்கும் போது பாதிக்காத வகையிலும், சரிவுகள் மற்றும் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பல பாரம்பரிய மரங்களுக்கு புகலிடமாக இருந்த இந்த பகுதியில் 140 புது மரங்கள் நடப்பட்டுள்ளன. மறுசீரமைப்பு பணியின் போது, சாய்ந்த மரங்கள் வேறு இடங்களில் நடப்பட்டன.முன்பு குடியரசு தினத்திற்கு, உள்கட்டமைப்பு ஏற்பாடுகளை செய்ய பல மாதங்கள் ஆகும்.
இதற்கு அதற்கான வசதிகளை ஏற்படுத்தவும், அதனை அகற்வும், இதனால் சேதம் ஏற்படுவதே காரணம். தற்போது, அந்த அவென்யூவில் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளதால் தாமதம் ஏற்படாது. மழைநீர் குழாய்கள், மின்சார கேபிள்கள் மற்றும் மின்கடத்தா கேபிள்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் நிலத்தடி பாதைகள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. மின்கம்பங்கள் தேவையான தொழில்நுட்பங்களுடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்