பெங்களூருவைச் சேர்ந்த டெய்லர் ரகு, வயது 47. இவர் மனைவி மஞ்சுளா. இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு குடிப்பெயர்ந்தனர். ஆரணி சின்னசாயக்காரத் தெருவில் வீடு, கடையை வாடகைக்கு எடுத்து தங்கினர். துணிகளை தைத்து கொடுப்பது, பட்டுப்புடவைகளை வாங்கி விற்பனைச் செய்வது என அவர்களின் வாழ்க்கை நகர்ந்துக்கொண்டிருந்தது. இந்த நிலையில், தம்பதி இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டிருக்கிறது. ஒருக்கட்டத்தில் கணவன்மீது கோபமடைந்த மஞ்சுளா சில நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்து சொல்லிக்கொள்ளாமல் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. மனைவியை அவர் பல இடங்களில் தேடியிருக்கிறார். மஞ்சுளா எங்குச் சென்றார்? என்ன ஆனார்? என்ற தகவல் அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியிலிருந்திருக்கிறார் ரகு.
இந்த நிலையில், நேற்று இரவு அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்வாடை வீசியது. அக்கம், பக்கத்திலிருக்கும் சிலர் அந்த வீட்டு உரிமையாளருக்குத் தகவல் கொடுத்தனர். அவர் வந்து கதவை நீண்ட நேரம் தட்டியிருக்கிறார். கதவு திறக்கப்படாததால், ஆரணி நகர போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது, ரகு தூக்கில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்தார். அவர் சடலத்துக்கு அருகிலேயே அவரால் செல்லமாக வளர்க்கப்பட்ட வந்த நாயும் சுருக்குக் கயிற்றில் தொங்கியபடி இறந்துகிடந்தது.
உடல்கள் அழுகியிருந்ததால், இந்த விபரீதம் நடந்து 4 நாள்கள் ஆகியிருக்கலாம் என்று போலீஸார் கருதுகிறார்கள். ரகுவின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாயின் உடலும் மீட்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ரகு ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் ஒன்றையும் போலீஸார் அங்கிருந்து கைப்பற்றியிருக்கிறார்கள். அந்தக் கடிதத்தில், “எனது சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. என் மனைவி இறந்துவிட்டார். அவர் இல்லாத உலகில் என்னால் வாழமுடியாது’’ என்று கூறியிருப்பதோடு, கடன் விவரங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். ரகுவின் மனைவி பிரிந்துச்சென்றதாகக் கூறப்படும் நிலையில், கடிதத்தில் அவர் இறந்துவிட்டதாக ரகு குறிப்பிட்டிருப்பது ஏன்? உண்மையில் அவரின் மனைவிக்கு என்ன நேர்ந்தது? என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.