மும்பை: டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு பென்ஸ் காரில் திரும்பிக் கொண் டிருந்தார். மதியம் 3 மணி அளவில் மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் உள்ள சூர்யா நதி மேம்பாலத்தில் அவரது கார் அதிவேகமாக சென்ற நிலையில், மற்றொரு காரை முந்த முயன்றபோது சாலைத் தடுப்புச் சுற்றில் மோதியது.
பின் இருக்கையில் இருந்த சைரஸ் மிஸ்திரியும், அவரது நண்பர் ஜெஹாங்கிர் பண்டோலும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். முன் இருக்கையில் இருந்த அனாஜிட்டா பண்டாலும் அவரது கணவர் டேரியஸ் பண்டோலும் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிரா காவல் துறையும் போக்குவரத்துக் கழகமும் ஏழு பேர் கொண்ட தடயவியல் குழுவை அமைத்தன. விபத்து நடந்த இடத்தையும், விபத்துக்குள்ளான காரையும் ஆய்வு செய்த இக்குழு, தங்கள் ஆய்வு முடிவை அறிவித்துள்ளது. “இந்த விபத்துக்கு அந்த மேம்பாலத்தின் தவறான வடிவமைப்பு முக்கியக் காரணம் ஆகும். மேம்பாலத்தின் நடுவே இருக்கும் தடுப்புச் சுவர் சாலையில் துருத்திக் கொண்டிருக்கிறது. இது தவறான வடிவமைப்பு ஆகும். அதேபோல், விபத்து நிகழ்வதற்கு சற்று தொலைவில், மூன்று வழிச் சாலை திடீரென்று இரண்டு வழிச் சாலையாக மாறுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், வாகனத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கூறுகையில், “வாகனத்தில் ஏர்பேக்குகள் உட்பட அனைத்து பாதுகாப்பு வசதிகளும் சரியாக செயல்பட்டுள்ளன. பின்னிருக்கையில் இருந்தவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை. இதனால், அதிவேகமாகச் சென்ற கார் தடுப்புச் சுவற்றில் மோதியதும், பின்னிருக்கையில் இருந்தவர்கள் அவர்களது இருக்கையில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.