திண்டிவனம் : திண்டிவனம் அருகே தனியார் பள்ளிக்கு இணையாக கல்வி கற்பிக்கப்படுவதால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 6 மாணவர்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மாணவர்களின் எண்ணிகள் 54-ஆக உயர்ந்துள்ளது. திண்டிவனம் அருகே கன்னிகாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களின் மொத்த எண்ணிக்கை வெறும் 6-ஆக மட்டுமே இருந்தது. கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகு நல்லாமூர், கூட்டேரிப்பட்டு, கீழ்எடையாளம், கன்னிகாபுரம் ஆகிய பல்வேறு கிராமங்களில் இருந்து 50-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்று வருகிறார்கள்.
ஒரே வகுப்பறை மட்டும் இருப்பதால் கூடுதல் வகுப்பறை கட்டித்தர வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கன்னிகாபுரம் கிராமத்தினர் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். மாட்டு கொட்டகையில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தும் நிலை இருப்பதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் தன்னுடைய மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.19 லட்சம் ரூபாய் ஒதுக்கி வகுப்பறை கட்ட இருக்கும் பகுதிகளை ஆய்வு செய்தார்.