நீட் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர்களுக்கு ஆர்.என்.ரவி சொன்ன மெசேஜ்!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் நேற்றிரவு வெளியாகின. நீட் தேர்வை 17.78 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய நிலையில், 9.03 லட்சம் பேர் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக ராஜ்பவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீட் தேர்வில் பல பெரிய மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.” என பதிவிட்டுள்ளது.

அதேபோல், நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கியுள்ளார். நீட் தேர்வில் வெற்றி பெறாத தேர்வாளர்கள் தற்காலிக பின்னடைவை மேம்பட்ட உத்திகள், வலுவான உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால் போராடி வெற்றி பெற வேண்டும் என்றும், மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக் கொண்டுள்ளார்.

நீட் தேர்வில் தேர்வில் ஹரியாணாவைச் சேர்ந்த மாணவி உள்பட 4 பேர் 99.99 சதவீதம் மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் மொத்தம் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைவு. கடந்த ஆண்டு 54.40 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்த நிலையில், இந்த ஆண்டு 51.3 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.