தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக சுமார் ஒன்றரை வருடங்கள் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. காய்ச்சல் பாதிப்பு குறைந்து மருத்துவர்களின் நீண்ட ஆலோசனைக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியது. இந்நிலையில், பக்கத்துக்கு மாநிலமான புதுச்சேரியில் கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ந்து விஷக்காய்ச்சல் போன்று ஒரு நோய் பரவி சளி, இருமல், தொண்டை வலி உடல் முழுவதும் தாங்க முடியாத வலி ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கொரோனா காலத்தில் கொரோனா தொற்று நோய் வந்தால் உடல்நிலை எந்த அளவுக்கு பாதிக்கப்படுமோ அந்த அளவுக்கு தற்போதும் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இந்த விஷக் காய்ச்சலால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. தொற்றுநோய் போன்று பரவும் இந்த விஷக் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றசாட்டு வைத்துள்ளன.
தமிழகத்திலும், மழை பெய்ய துவங்கியுள்ளதால் சளி, காய்ச்சலால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது இயல்பான பிரச்சினை என்றாலும், அண்டை மாநிலத்தில் நிலவி வரும் சூழல் தமிழகத்துக்கு சற்று பயத்தை கொடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும், காய்ச்சல் பரவலை தடுக்க அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் பரவி வரும் மர்ம காய்ச்சல் சம்பந்தமாக சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை மற்றும் கல்வித்துறையின் உயரதிகாரிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, விஷக் காய்ச்சலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எல்கேஜிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பத்து நாட்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை வைத்துள்ளார்.