புஷ்கர் காயத்திரி இயக்கத்தில் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற விக்ரம் வேதா திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த நிலையில், இந்தியில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சாயிப் அலிகான் நடித்துள்ளனர். வரும் 30 ஆம் தேதி படம் இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழைப் போலவே இந்தியிலும் அதிரடி மற்றும் ஆக்ஷனுக்கு குறைவில்லாமல் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட டிரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக, பின்னணி இசைக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.
தமிழில் விக்ரம் வேதாவுக்கு இசையமைத்த சாம் சிஎஸ், இந்தி ரீமேக்கிலும் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், அதிரடிக்கு இசை மூலம் அவர் மெருகூற்றியிருப்பது அமோக வரவேற்பையும் பாராட்டையும் ஒருசேர பெற்றிருக்கிறது. பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களும் இயக்குநருடன் சேர்ந்து இசையமைச்சர் சாம் சிஎஸ்ஸூக்கும் பாராட்டு கூறி வருகின்றனர். சாம் சிஎஸ், ஓர் இரவு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். விக்ரம் வேதாவில் அவர் அமைத்த இசை மற்றும் பின்னணி இசை, தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களும் நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்தது. இன்றளவும் தமிழ் விக்ரம் வேதாவின் தீம் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இசையில் தனித்துவம் காட்டி தனக்கென தனி ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களை மயக்கி வைத்திருக்கும் அவர், கண்ணம்மா என்ற மெலோடி பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்து வைத்துள்ளார். மெலோடி பாடல்களில் இன்றைய இளைய ஃபேவரைட் இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் சாம் சிஎஸ் இருக்கிறார். கைதி, அடங்க மறு, சாணிக்காயிதம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், சுழல் போன்ற தொடர் வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த அவர், சமீபத்தில் வெளியான ராக்கெட்ரி படத்துக்கும் இசையமைத்து பெரும் புகழ் வெளிச்சத்தை பெற்றார். தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் கவனத்தை ஈர்த்திருக்கும் சாம் சிஎஸ், தமிழ் மற்றும் பாலிவுட்டைக் கடந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றத் தொடங்கியுள்ளார்.