போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் மதம் மாறி என்னை திருமணம் செய்ய வேண்டும் என்றும் இல்லாவிடில் ஆசிட் வீசிவிடுவதாக நர்சிங் மாணவியை மிரட்டிய இஸ்லாமிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தை சேர்ந்தவர் மோனு மன்சூரி (வயது 22). இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு நர்சிங் படிக்கும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
ஆனால் அந்த நர்சிங் மாணவி மோனு மன்சூரியை காதலிக்க மறுத்துள்ளார். ஆனாலும் விடாத மோனு மன்சூரி மாணவியை தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
காதலிக்குமாறு மிரட்டல்
இந்த நிலையில், சம்பவத்தன்று நர்சிங் மாணவி வழக்கம் போல் கல்லூரி சென்றுள்ளார். கல்லூரி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை மோனு மன்சூரி பின் தொடர்ந்துள்ளார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மாணவியை நிறுத்தி தன்னை காதலிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் மாணவி திட்டவட்டமாக முடியாது என்று கூறியுள்ளார். எனினும் மோனு மன்சூரி மாணவியை அங்கிருந்து செல்லவிடாமல் அவரது கையை பிடித்துக்கொண்டுள்ளார்.
ஆசிட் வீசிவிடுவேன் என்று..
தொடர்ந்து மாணவி மீது பூக்களை மழையாக பொழிய வைத்து லவ் புரோபசல் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கையை விடுமாறு கத்தி கூச்சலிட்டார். எனினும் அசராத மோனு மன்சூரி மாணவியிடம், மதம் மாறி தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்றும், இதற்கு மறுத்தால் உன் மீது ஆசிட் வீசிவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதையடுத்து மாணவி அவரின் பிடியில் இருந்து தப்பி ஓடி சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
முஸ்லீம் பையன்
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோனு மன்சூரியை அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பாக நர்சிங் மாணவி கூறுகையில், ”என்னை காதலிக்குமாறு மிரட்டியது ஒரு முஸ்லீம் பையன். அவனுக்கும் எங்க ஊர்தான்… நான் தினமும் கல்லூரிக்கு செல்லும் போதும்.. கல்லூரி முடிந்து வரும்போதும் என்னை பின் தொடர்ந்து வருவான்… அன்றும் என்னை பின் தொடர்ந்து வந்து என் கையை பிடித்துக்கொண்டான்.. நான் விடுமாறு கத்தியும் கையை விடவில்லை…
துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம்
தொடர்ந்து என் மீது பூக்களை வீசினான்… என்னை மதம் மாறி திருமணம் செய்து கொள் என்றும்… இதற்கு மறுத்தால் ஆசிட் வீசி விடுவதாகவும் கூறினான். இதேபோல் என் வாட்ஸ் அப் நம்பரை தெரிந்துகொண்டு எனக்கு அடிக்கடி மெசேஜ் செய்து தொந்தரவு செய்தான். ஒருநாள் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை அனுப்பி திருமணம் செய்யாவிட்டால் உன்னை சுட்டு கொன்றுவிடுவேன் என்று மெசேஜ் அனுப்பினான்” என்று கூறினார்.
10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
மாணவியின் புகார் தொடர்பாக போலீசார் கூறுகையி, சம்பவத்தன்று கல்லூரிக்கு வெளியே மறித்துக்கொண்டு மாணவியை மோனு மன்சூரி மிரட்டியுள்ளார். மேலும் முஸ்லீம் மதத்துக்கு மாறி தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஆசிட் வீசிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்” என்று கூறினர். தொடர்ந்து போலீசார் மோனு மன்சூரி மீது மத்தியப் பிரதேச மதச் சுதந்திரச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.