கொல்கத்தா: பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற நிதிஷ்குமார், ஹேமந்த் சோரனுடன் கைகோர்ப்போம் என்றும், மம்தா பானர்ஜி
வரும் 2024- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் இப்போதே ஆயத்தமாகி வருகின்றன.
பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
சூடுபிடிக்கும் தேர்தல் களம்
குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் மத்தியில் பாஜகவை அகற்ற எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படாது என்று ஒருபக்கம் பாஜக விமர்சித்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கும் மேல் உள்ள நிலையில், இப்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது.
ஒருங்கிணைவோம்
இன்று கொல்கத்தாவில் கட்சியினர் மத்தியில் பேசிய மம்தா பானர்ஜி, பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற அண்டை மாநிலங்களில் உள்ள நிதிஷ் குமார், ஹேமந்த் சோரன் உள்ளிட்ட தலைவர்களும் கை கோர்த்து செயல்படுவோம் என்று பேசியிருக்கிறார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி பேசியதாவது:- நான், நிதிஷ் குமார், ஹேமந்த் சோரன் உள்பட பலரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் ஒருங்கிணைவோம்.
கைகோர்த்து செயல்பட வேண்டும்
பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் கைகோர்த்து செயல்பட வேண்டும். பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருபக்கமும் பாஜக மறுபக்கமும் வரும். 300 இடங்கள் என்ற பாஜகவின் ஆணவமே அதற்கு எதிராக மாறும். அண்மையில் கட்டுக்கட்டாக பணத்துடன் வந்த ஜார்க்கண்ட் எம்.எல்.ஏக்களை கைது செய்ததன் மூலம் அண்டை மாநிலமான ஜார்க்கண்டில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தடுத்து இருக்கிறோம்.
அவதூறு பரப்புகின்றனர்
எங்களை சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவைகளை வைத்து மிரட்டிவிடலாம் என்று பாஜக நினைக்கிறது. இதுபோன்ற தந்திரங்களை அவர்கள் எந்த அளவுக்கு பின்பற்றுகிறார்களோ, அந்த அளவுக்கு அடுத்த ஆண்டு பஞ்சாயத்து தேர்தல் மற்றும் 2024 மக்களவை தேர்தல்களில் தோல்வியை நெருங்குவார்கள். பாஜகவும் சில ஊடகங்களும் தேவையற்ற அவதூறுகளை எனக்கு எதிராகவும் எனது கட்சிக்கு எதிராகவும் பரப்புகின்றன” என்றார்.