மதுரை: ரூ.47.72 கோடி மதிப்பீட்டில் மதுரை தமுக்கம் மைதானத்தில் கட்டி முடிக்கப்பட்ட மாநாட்டு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 10,085 சதுர மீட்டர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் புதிய மாநாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 3,500 நபர்கள் வரை சிரமமின்றி அமர்ந்து பங்கு கொள்ளும் வகையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.44.10 கோடி மதிப்பீட்டில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். மீனாட்சி கோயில் அருகே பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த வாகன நிறுத்தம் நிறுவப்பட்டுள்ளது. தரைமட்டத்திற்கு கீழ் 2 தளங்கள்,மேல் 2 தளங்கள் என மொத்தம் 69,575 சதுர மீட்டர் பரப்பளவில் 4 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு மதுரை சர்க்யூட் ஹவுசில் ஓய்வெடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை காலை மதுரை பாண்டிக்கோவில் அருகே ரிங் ரோட்டில் நடைபெறவுள்ள வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இல்ல திருமணத்தில் கலந்துகொள்கிறார். நாளை முற்பகல் 11.40 மணிக்கு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
கலாசாரத்தை அடையாளப்படுத்தும் தமுக்கம்: மதுரை காந்தி மியூசியம் மற்றும் இதனைச்சுற்றிய பகுதிகள் ராணிமங்கம்மாள் கோடைகால அரண்மனையாக இருந்தது. அருகே உள்ள தமுக்கம் பகுதி யானை, குதிரைகளின் வீரவிளையாட்டுகளுடன், மல்யுத்தம் உள்ளிட்டவைகளை கண்டு களிப்பதற்காக 8 ஏக்கர் பரப்பளவில் பெரிய மைதானமாக உருவாக்கப்பட்டது. இந்த மைதானத்தில் தமிழன்னை சிலை, சங்க கால தமிழ் புலவர்கள் நினைவு தூண், நாடக தந்தை சங்கரதாஸ்சுவாமிகள் சிலை அமைந்துள்ளது. மைதானத்தின் உள்பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில், அழகிய கோபுரத்துடன் கூடிய கலையரங்கம் கட்டப்பட்டிருந்தது.