மதுரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருநெல்வேலி, கோவில்பட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு பிற்பகல் விருதுநகர் வருகிறார். அங்குள்ள ராம்கோ கெஸ்ட் ஹவுசில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர், கார் மூலம் இன்று மாலை 6 மணியளவில் மதுரை வருகிறார். பின்னர் இன்றிரவு வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஐடா ஸ்கட்டர் ஆடிட்டோரியத்தில் நடைபெறும் மதுரை வேலம்மாள் குழும தலைவர் இல்ல திருமண வரவேற்பில் கலந்துகொள்கிறார்.
இதன்பிறகு இரவு 7 மணிக்கு மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமுக்கத்தில் ரூ.47.72 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்க மையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்தபடியே மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ரூ.44.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பன்னடுக்கு வாகன காப்பகத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார். இன்று இரவு மதுரை சர்க்யூட் ஹவுசில் ஓய்வெடுக்கும் அவர், நாளை காலை மதுரை பாண்டிக்கோவில் அருகே ரிங் ரோட்டில் நடைபெறவுள்ள வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இல்ல திருமணத்தில் கலந்துகொள்கிறார். நாளை முற்பகல் 11.40 மணிக்கு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு, மதுரையில் முதல்வர் செல்லும் வழித்தடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கலாசாரத்தை அடையாளப்படுத்தும் தமுக்கம்: மதுரை காந்தி மியூசியம் மற்றும் இதனைச்சுற்றிய பகுதிகள் ராணிமங்கம்மாள் கோடைகால அரண்மனையாக இருந்தது. அருகே உள்ள தமுக்கம் பகுதி யானை, குதிரைகளின் வீரவிளையாட்டுகளுடன், மல்யுத்தம் உள்ளிட்டவைகளை கண்டு களிப்பதற்காக 8 ஏக்கர் பரப்பளவில் பெரிய மைதானமாக உருவாக்கப்பட்டது. இந்த மைதானத்தில் தமிழன்னை சிலை, சங்க கால தமிழ் புலவர்கள் நினைவு தூண், நாடக தந்தை சங்கரதாஸ்சுவாமிகள் சிலை அமைந்துள்ளது. மைதானத்தின் உள்பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில், அழகிய கோபுரத்துடன் கூடிய கலையரங்கம் கட்டப்பட்டிருந்தது.
ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்கும் வகையில், உயரமான மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. மீதியுள்ள 6 ஏக்கர் காலி இடம் மைதானமாகவும் இதனை சுற்றிலும் எழுப்பி 4 வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள், கண்காட்சிகள் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டு வந்தன.
பாரம்பரிய மிக்க இந்த அரங்கு, அதிமுக ஆட்சிக்காலத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடித்து அகற்றப்பட்டது. ரூ.47 கோடி மதிப்பீட்டில், அதே இடத்தில், புதிய கலையரங்கம், வணிக வளாகம் கட்டும் பணி கடந்த 2019ல் துவங்கியது. ஆனால், கொரோனா தொற்றால், இரண்டு ஆண்டுகள் கட்டுமான பணி நடைபெறவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு பின் கட்டுமான பணி வேகமாக நடந்து தற்போது முடிந்துள்ளது. கலையரங்கின் இருபுறமும் மொத்தம் 6 நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளன.
பிரதான வாயில் கோபுர வாசலாக அமைக்கப்பட்டுள்ளது. கலையரங்கின் கிழக்கு பகுதியில் மைதானத்தை பார்த்தவாறு பெரிய அளவிலான மேடை அமைக்கப்பட்டுள்ளது. கலையரங்கம் முழுமையாக குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. கலையரங்கின் மேற்கு பகுதியில் மீனாட்சி தேரோட்டம், அழகர் தங்க குதிரை வாகனத்தில் வருதல், வீர விளையாட்டு, ஜல்லிக்கட்டு, விவசாயம் உள்ளிட்ட 7 கலாச்சார நிகழ்வுகளை குறிக்கும் வகையில், வண்ண சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.