எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் நேற்றிரவு வெளியாகின.
இந்தத் தேர்வில் ஹரியாணாவைச் சேர்ந்த மாணவி உள்பட 4 பேர் 99.99 சதவீதம் மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர். நீட் தேர்வை 17.78 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய நிலையில், 9.03 லட்சம் பேர் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் மொத்தம் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைவு. கடந்த ஆண்டு 54.40 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்த நிலையில், இந்த ஆண்டு 51.3 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மாணவர் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மாணவி ஹரிணி 702 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அதேசமயம், ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் இந்திரா நகரில் வசித்து வரும் அரசு பள்ளி ஆசிரியையான அமுதா என்பவரின் மகளான மாணவி லக்ஷ்ணா ஸ்வேதா, நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்வை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வரும் நிலையில், தேர்வின் காரணமாக தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. மாணவ, மாணவிகளுக்கு இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் அளித்தாலும், மருத்துவராகும் கனவு நீட் தேர்வால் சிதைந்து போவதால், அவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இதனை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டப்போராட்டம் தொடர்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டப்போராட்டம் தொடர்கிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அரசு இருக்கிறது. மாணவர்கள் தயவு செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “12 ஆம் வகுப்பு படிப்பவர்களும் குழந்தைகள் தான். உயிரை மாய்த்துக் கொள்வதால் பெற்றோரும், சமூகமுத்தையும் கவலைக்குள்ளாக்குகிறீர்கள். நீட் தேர்வு வரக்கூடாது என்பது தான் நமது எண்ணம் அதற்கான சட்டப்போராட்டம் நடகிறது. அதுவரை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான முகாம் ஒவ்வொரு பள்ளியிலும் நடக்கிறது. மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தால் தயவு செய்து அங்கு சென்று கவுன்சிலிங் எடுத்துக் கொள்ளலாம். மாணவர்கள் தயவு செய்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம்.” என்றார்.