வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடுதலை’ படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
’அசுரன்’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் ‘விடுதலை’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்கிற சிறுகதையை மையமாக வைத்து, இரண்டு பாகங்களாக உருவாகிவரும் இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், சேத்தன், பவானி ஶ்ரீ உட்படப் பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைக்கிறார். வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடலை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ் ஆகியோர் பாடியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இளையராஜாவின் இசையில் இந்த படத்திற்காக கம்போஸ் செய்யப்பட்ட பாடல்களை ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ் ஆகியோர் பாடி உள்ளதாகவும், இதில் தனுஷ் பாடிய ஒரு பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது ‘விடுதலை’ படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பாடியிருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைப்பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
‘விடுதலை’ படத்தை எடுக்க ரூ.4 கோடி வரை செலவாகும் என்று படப்பிடிப்புக்கு முன் கணிக்கப்பட்ட நிலையில் இப்போது வரை படப்பிடிப்பு செலவு ரூ.40 கோடியைக் கடந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்னும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையடைவில்லை என்பதால் படத்தின் பட்ஜெட் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே ‘விடுதலை’ படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முன்வந்ததாகத் தெரிகிறது.
சமீபத்தில் வெளிவந்த ‘விடுதலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் நடிகர் சூரி போலீசாகவும், விஜய் சேதுபதி கைதி போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: செப்டம்பர் 8 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide