மதுரை: மதுரை – நெல்லை நான்கு வழிச்சாலையில் உள்ள திருமங்கலம் கப்பலூரில் விதிமுறையை மீறி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் டோல்கேட் அமைத்துள்ளது.
நான்கு வழிச் சாலைகளை பொறுத்தவரையில் 60 கிமீ. தொலைவிற்குள் ஒரு டோல்கேட் இருக்க வேண்டும் என்ற தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் விதிமுறை உள்ளது. அதுபோல், நகராட்சிக்குள் 10 கி.மீ, மாநகராட்சிக்குள் 10 கி.மீ, தொலைவிற்குள் இருக்கும் சுங்கச்சாவடிகளை எடுக்க வேண்டும் என்ற விதியும் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் உள்ள நான்கு வழிச்சாலைகளில் 11 இடங்களில் விதிமுறைகளை மீறி நான்கு வழிச் சாலைகளில் டோல்கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அடிப்படையில் மதுரையில் கப்பலூரில் விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ளன. கப்பலூருக்கு முன் 50 கி.மீ., தொலைவிற்குள் திண்டுக்கல் சாலையில் மற்றொரு டோல்கேட் உள்ளது. 60 கிமீ அடிப்படையில் கப்பலூர் டோல்கேட் அகற்றப்பட வேண்டும். ஆனால், அகற்றப்படாததால் இந்த டோல்கேட்டை அகற்றக் கோரி திருமங்கலம் சுற்றுவட்டார 50 கிராம மக்கள், தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடந்த பல ஆண்டாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் போராட்டத்திற்கு பிறகு சமீப காலமாக உள்ளூர் பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு மட்டும் “டோல்கேட்” வசூல் செய்யாமல் உள்ளனர். ஆனால், இந்த டோல்கேட்டை அகற்ற வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில் மதுரை ஒத்தக்கடைக்கு பிரச்சாரத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினிடம், கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் முறையிட்டனர். அதற்கு முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் டோல்கேட் உறுதியாக அகற்றப்படும் என உறுதியளித்தார்.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தப்பிறகு பலமுறை மதுரை வந்துள்ள முதல்வர், இதுவரை கப்பலூர் டோல்கேட் அகற்றவது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், தற்போது வரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த 50 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென் மாவட்டங்களுக்கு மதுரையிலிருந்து செல்லும் 25 கி.மீ., தொலைவிற்குள் சிந்தாமணி, வளையங்குளம், கப்பலூர் ஆகிய டோல்கேட்டுகளில் கட்டணம் செலுத்தும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்துள்ளார். அன்றாடம் கப்பலூர் டோல்கேட்டால் மக்கள், வாகன ஓட்டிகள் படும் துயரத்தை அறிந்து அந்த டோல்கேட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து கப்பலூர் டோல்கேட்டை அகற்றக் கோரி, மதுரை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் தென்காசி தொகுதி எம்எல்ஏவுமான வேங்கட ரமணா கூறுகையில், “கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி மத்திய சாலை போக்குவரவத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் பேசியபோது, அந்த தொலைவிற்குள் மற்றொரு டோல்கேட் இருந்தால் 3 மாதத்தில் அகற்றப்படும் என்றார். அவர் கூறிய இந்த விதிமுறையை பின்பற்றி நடவடிக்கை எடுத்தால் மதுரை கப்பலூர் டோல்கேட் அகற்றப்பட வேண்டும். ஆனால், 5 மாதமாகியும் தற்போது நிதின் கட்கரி கூறியபடி இந்த டோல்கேட்டு அகற்றப்படவில்லை. குற்றாலத்திற்கும், சபரிமலைக்கு செல்வோரையும் குறி வைத்தே இந்த டோல்கேட் அகற்றப்படாமல் உள்ளனர்” என்றார்.
நிதின் கட்கரி கூறியபடி அவருக்கு தமிழக அரசு, 60 கி.மீ., தொலைவிற்குள் இருக்கும் டோல்கேட் பட்டியலில் கப்பலூர் டோல்கேட்டை சேர்த்து அனுப்பினார்களா என்ற கேள்வி தென் மாவட்ட மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.