நீட் யு.ஜி 2022 இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது. இந்த முடிவுகள் என்.டி.ஏ அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in இல் சரிப்பார்க்கலாம். மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நாட்டின் 546 நகரங்களில் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர்.
இந்த தேர்வில் ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா 715 மதிப்பெண்களுடன் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 17.64 லட்சம் பேர் தேர்வை எழுதியதில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 56.30 சதவீதம் பேர் இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல் தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதியவர்களில் 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவர் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 30-வது இடமும், ஹரிணி 702 மதிப்பெண் பெற்று 43-வது இடத்தையும் பிடித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டினை விட தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 108 மதிப்பெண்ணிலிருந்து 93 ஆக குறைந்துள்ளது. அதேபோல் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியவர்களில் உத்தரபிரதேசம் மற்றும் மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்து இருப்பதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நீட் தேர்வு வெளியான நிலையில், சென்னை திருமுல்லைவாயில் இந்திரா நகரில் வசித்து வரும் மாணவி லக்ஷ்மணா ஸ்வேதா அதிகாலை 3:30 மணியளவில் வீட்டில் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த மாணவி தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த மாணவி கடந்த 17 ஆம் தேதி நீட் தேர்வு எழுதியதாகவும் அதன் ரிசல்ட் இன்று அதிகாலை 1 மணிக்கு வந்ததாகவும் அதில் தோல்வி அடைந்ததை பார்த்துவிட்டு மன வருத்தத்தில் தனக்குத்தானே ஹாலில் உள்ள கொக்கியில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது அந்த மாணவியின் உடலை மீட்ட திருமுல்லைவாயில் காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா?