இந்தியாவின் பழம்பெரும் கட்சி, பிரதான எதிர்க்கட்சி என
காங்கிரஸ்
கட்சியை பற்றி ஒருபுறம் சொல்லிக் கொண்டாலும், மறுபுறம் அதன் ஆணிவேர் பலமாக ஆட்டம் கண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. ஏனெனில் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பலரும் காங்கிரஸில் இருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்து விட்டனர். சிலர் தனிக்கட்சி ஆரம்பித்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக சரியான தலைமை இன்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதனால் போதிய வழிகாட்டுதல் இன்றி கட்சி தொண்டர்கள் செய்வதறியாது தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து இரண்டு முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டது. வரும் 2024ஆம் ஆண்டு அடுத்த மக்களவை தேர்தல் வரவுள்ளது. இதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் காங்கிரஸ் புத்துயிர் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில் படிப்படியாக கரைந்து பெரும் சிக்கலை சந்திக்கக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இந்த சூழலில் தான் ”இந்திய ஒற்றுமை பயணம்” என்ற பெயரில் பாத யாத்திரையை தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. கன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை 12 மாநிலங்கள் வழியாக 3,570 கிலோமீட்டர் தூரத்தை கடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 150 நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. இது அரசியல் யாத்திரை அல்ல என்றும், தவறான சனாதன நம்பிக்கையை தகர்க்கும் பயணம் என்றும் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.
ஆனால் அரசியல் வெளிச்சம் பாய்ச்சுவதற்காகவே இப்படியொரு ஏற்பாடு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். கன்னியாகுமரியில் ராகுலின் பாத யாத்திரையை தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின்
தொடங்கி வைத்தார். இதற்கிடையில் பல்வேறு ஆலோசனைகளையும் ராகுலுக்கு வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, தமிழ்நாட்டில் வலுவான கூட்டணி அமைந்துவிட்டது.
இதேபோல் வட இந்திய மாநிலங்களிலும் கூட்டணி அமைவது அவசியம். பாஜகவிற்கு எதிராக சிதறும் வாக்குகளை ஒன்று சேர்க்க வேண்டும். அதற்கு பலம் வாய்ந்த பிராந்திய கட்சிகளை ஒன்றிணைப்பதே சிறந்த வழி. கேரளா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கூட்டணியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடுங்கள்.
இது தேர்தல் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். கடந்த தேர்தலில் இருந்து பாடம் கற்போம். இல்லையெனில் மீண்டும் தோல்வி முகமாகத் தான் காங்கிரஸ் காட்சியளிக்கும். கள நிலவரத்தை மாற்றுங்கள். உங்களால் முடியும் என்று அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி உரிய நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
நாட்டின் மூத்த அரசியல் கட்சியாக திகழும் காங்கிரஸ் இன்னும் பல ஆண்டுகள் நிலைத்திருக்க வேண்டும். நல்லாட்சி வழங்க வேண்டும் என்று கட்சியினரை தாண்டி பொதுவெளியிலும் பேசத் தொடங்கிவிட்டனர். அதற்கு மோடி அரசின் நடவடிக்கைகளும் முக்கிய காரணமாக முன்வைக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை காங்கிரஸ் சரியாக பயன்படுத்தி கொள்ளுமா? என்பது தான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக முன்வந்து நிற்கிறது.