கொல்கத்தா: “வரும் 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை தோற்கடிக்கும்” என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, “அதிகாரத்தில் இருப்பதால் பாஜக ஆணவத்துடன் செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். அவர் மேலும் பேசியது: “டெல்லியில் நடைபெற்ற சுபாஷ் சந்திர போஸ் சிலை திறப்பு விழாவுக்கு எனக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படவில்லை. முறையான அழைப்பு இல்லாத நிலையில், விழாவில் பங்கேற்க நான் என்ன பாஜகவின் கொத்தடிமையா?
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வரும்போதெல்லாம் மேற்கு வங்கத்திற்கு வருகை தருவது வழக்கம். இம்முறையும் அவர் மேற்கு வங்கத்திற்கு வருகை தரவும், என்னை சந்திக்கவும் விரும்பினார். ஆனால், அது நிகழவில்லை. இதற்கு மத்திய அரசே காரணம். அமெரிக்காவின் சிகாகோ, சீனா என நான் செல்ல இருந்த பல இடங்களுக்கு செல்ல முடியாமல் மத்திய அரசு செய்துவிட்டது” என்று அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார்.
பிர்பும் மாவட்டத்தைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ அனுப்ரதா மண்டல் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த மம்தா பானர்ஜி, அவர் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என குறிப்பிட்டார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், “முதலில் ஓர் அமைச்சர் (பார்த்தா சாட்டர்ஜி), அடுத்து ஒரு எம்எல்ஏ என பாஜக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் மூலம், கட்சியின் மாவட்ட அளவிலான தலைவர்களை அச்சம் கொள்ள வைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்கான ஆட்டம் மேற்கு வங்கத்தில் இருந்து தொடங்கும். பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளன. ஒருபக்கம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள், மறுபக்கம் தனித்துவிடப்பட்ட பாஜக என்ற நிலை உருவாக்கப்படும். அத்தகைய சூழலில் பாஜகவால் எவ்வாறு வெற்றி பெற்று அரசு அமைக்க முடியும்?” என்று அவர் பேசினார்.