‘நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படுபவர் சுபாஷ் சந்திர போஸ். இந்திய சுதந்திர போராட்டத் தலைவர்களுள் ஒருவரான இவரின் 125-வது பிறந்தநாள் தினத்தையொட்டி கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மின் ஒளி வடிவிலான சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மேலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸிற்கு அதே இடத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 28 அடி உயரமுள்ள நேதாஜி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி தற்போது திறந்து வைத்திருக்கிறார். செப்டம்பர் 9 முதல் 11ம் தேதி வரை வரை இரவு 8.00 மணிக்கு நேதாஜியின் வாழ்க்கை குறித்த ட்ரோன் கண்காட்சி இந்தியா கேட் பகுதியில் காண்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனைப் பார்வையாளர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால்,
28 அடி உயரம் கொண்ட இந்த சிலை 280 மெட்ரிக் டன் எடை அளவில் மோனோலித்திக் கிரானைட் என்ற கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. 26ஆயிரம் மணிநேரம் கடின உழைப்புக்குப்பின் உருவாக்கப்பட்ட இந்த சிலை முற்றிலும் கைகளால் செதுக்கப்பட்டவை. தெலங்கானா மாநிலம் கம்மம் நகரிலிருந்து கறுப்பு கிரானைட் கல் டெல்லிக்கு கொண்டுவரப்படுவதற்காக 140 சக்கரங்கள் கொண்ட டிரக் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் தலைமையிலான குழுவினர், பாரம்பரிய நுட்பங்கள் மற்றும் நவீன கருவிகளைப் பயன்படுத்தி கையால் இந்த சிலையை வடிவமைத்துள்ளனர்.இந்தியாவில் உள்ள உயரமான சிலைகளில் தற்போது இதுவும் ஒன்று.