72நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி! ஓபிஎஸ் பச்சோந்தியை விட ஆபத்தானவர் என பரபரப்பு பேட்டி..

சென்னை: பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை  ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை தந்தார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது, அவர் பச்சோந்தியை விட ஆபத்தானவர் என்று கூறினார்.

எடப்பாடி கூட்டிய  அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, 72 நாட்களுக்கு பின் ஈபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி,  அங்கு, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இதையடுத்து அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணியளவில் பசுமைச் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்பட்ட நிலையில், வழிநெடுங்கிலும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்று 11.30 மணியளவில் அதிமுக அலுவலகம் வந்தடைந்தார்.

இதற்கிடையில், ஈபிஎஸ் மற்றும் ஆதரவாளர்களை அதிமுக அலுவலகத்திற்கு செல்ல அனுமதி வழங்க கூடாது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், நீதிமன்றம் எடப்பாடியிடம் அலுவலக சாயியை ஒப்படைக்க ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதால், இதில் காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில், திமுக தலைமை அலுவலகத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார் உள்பட பலர் மற்றும் ஏராளமான தொண்டர்கள் வருகை தந்ததனர். அவர்கள் எடப்பாடியை வரவேற்கும் ஏற்பாடுகளை செய்தனர்.

இதையடுத்து, 72 நாட்களுக்கு பின் ஈபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அவரை கட்சியின் மூத்த நிர்வாககள் வரவேற்றனர். இதையடுத்து, அங்குள்ள, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

பின்னர் நிர்வாகிகளுடன் கலந்துரையாடி எடப்பாடி,  புதிதாக நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், அதிமுகவை சிதைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு நமது வெற்றி ஒரு பாடமாக இருக்கும் என்று கூறனிர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுகவில் எந்த பிளவும் ஏற்படவில்லை என்றவர், அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும் என்றார். பொதுக் குழுவில் ஒருமனதாக எதிர்கால நன்மை கருதி ஒற்றைத் தலைமை முடிவு செய்யப்பட்டது. இடைக்கால பொதுச் செயலாளராக என்னை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி.

பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அத்துமீறி கட்சி அலுவலகத்தில் சிலர் நுழைந்தனர் என்று ஓபிஎஸ் தரப்பினரை சாடியவர், அதிமுக அலுவலகத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தோம். ஆனால், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றவர், பின்னர் உயர்நீதிமன்றம் சென்றபிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 திமுக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சிலரை கட்சி அலுவலகத்திற்குள் அனுமதித்து நுழைந்து கதவுகளை உடைத்துள்ளனர். பொருட்கள் சேதமடைந்துள்ளன. வேண்டுமென்றே திட்டமிட்டு கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது புகார் அளித்தோம். திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றத்தை நாடினோம். நீதிமன்றமும் உத்தரவிட்டது. நேற்று தான் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். திமுக அரசில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அதிமுகவில் பிளவு என்பது கிடையாது. சிலர் துரோகம் செய்தார்கள். அவர்கள் நீக்கப்பட்டார்கள்.

ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றவர், ஓபிஎஸ் பச்சோந்தியை விட ஆபத்தானவர். சந்தர்ப்பத்திற்கு ஏற்றார் போல மாறுவார். ஒரு அதிமுக எம்எல்ஏவை கூட திமுகவால் அசைக்க முடியவில்லை. அதிமுகவை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆர்.எஸ்.பாரதியை தேர்தலில் போட்டியிடச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

திமுகவைப் பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு, இல்லாத போது ஒரு பேச்சு. திமுகவுக்கு பொய் பேசுவதற்காக நோபல் பரிசு வழங்கலாம். ஓ.பன்னீர்செல்வம் எந்த உண்மையை வெளிப்படுத்த போகிறார் ? தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு தான் வருகிறேன்.

சூதாட்டத்திற்கு தடை விதிக்க யாராவது கருத்து கேட்பார்களா ? எதுவுமே தெரியாத முதலமைச்சர் தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என்றார் எடப்பாடி பழனிசாமி. மேலும், சென்னை,  நீதிமன்ற உத்தரவுபடி அதிமுக தலைமை அலுவலகம் எங்கள் தரப்புக்கு தரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.