நீட் யு.ஜி 2022 இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது. இந்த முடிவுகள் என்.டி.ஏ அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in இல் சரிப்பார்க்கலாம். மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நாட்டின் 546 நகரங்களில் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர்.
இந்த தேர்வில் ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா 715 மதிப்பெண்களுடன் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 17.64 லட்சம் பேர் தேர்வை எழுதியதில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 56.30 சதவீதம் பேர் இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதியவர்களில் 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவர் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 30-வது இடமும், ஹரிணி 702 மதிப்பெண் பெற்று 43-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த மாணவன் திரிதேவ் விநாயகா, அகில இந்தியா தரவரிசையில் 30-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் மதிப்பெண்ணையும் பெற்றுள்ளார். இவர் மருத்துவ நுழைவுத் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண் பெற்று உள்ளார். இதற்கிடையில் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் திரிதேவ் விநாயகா செய்தியாளர்களை சந்தி்து பேசியபோது கூறியதாவது,
நீட் தேர்வில் வெற்றி பெற 2 ஆண்டு வகுப்பறை திட்டத்தில் சேர்ந்தேன். அப்போது கருத்துகளைப் புரிந்து கொள்வதில் எடுத்த முயற்சிகள் மற்றும் கற்றல் அட்டவணையை கண்டிப்பாகப் பின்பற்றியதால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. அது தவிர கேள்வி வங்கிகளை ஆன்லைனில் கூர்ந்து படித்தேன். இந்த நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் நேர மேலாண்மை திறன்கள் குறித்த மெய்நிகர் ஊக்க அமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொண்டேன். மேலும் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பெற்றோர் ஆதரவு காரணமாக நான் இந்த நிலையை எட்ட முடிந்ததது என்று தெரிவித்தார்.
முன்னதாக இந்த தேர்வு வெளியான நிலையில், சென்னை திருமுல்லைவாயில் இந்திரா நகரில் வசித்து வரும் மாணவி லக்ஷ்மணா ஸ்வேதா அதிகாலை 3:30 மணியளவில் வீட்டில் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த மாணவி தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த மாணவி கடந்த 17 ஆம் தேதி நீட் தேர்வு எழுதியதாகவும் அதன் ரிசல்ட் இன்று அதிகாலை 1 மணிக்கு வந்ததாகவும் அதில் தோல்வி அடைந்ததை பார்த்துவிட்டு மன வருத்தத்தில் தனக்குத்தானே ஹாலில் உள்ள கொக்கியில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா?