Rahul Gandhi: 'இந்திய ஒற்றுமை பயணம்' 2-வது நாள் யாத்திரை.. 'நீட்' அனிதாவின் குடும்பத்தினர் சந்திப்பு!

2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக இந்திய ஒன்றுமை பயணம்(bharat jodo yatra) என்ற நடைப்பயணத்தை காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். இந்த யாத்திரையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியிடம் தேசியக்கொடி வழங்கி தொடங்கிவைத்தார்.

ராகுல் காந்தியின் இந்திய ‘ஒற்றுமை நடைப்பயணம்’ 150 நாட்கள் 3,571 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று காஷ்மீரில் நிறைவடைகிறது. முதல் நாள் நடைப்பயணமானது குமரி காந்தி மண்டபத்தில் துவங்கி 600 மீட்டர் தூரத்தில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில் நிறைவடைந்தது.

இரண்டாவது நாளான இன்று அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தர் கல்லூரி வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்திய பிறகு ராகுல் காந்தி தனது பயணத்தை தொடங்கினார். இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

2-வது நாளான இன்று கொட்டாரம் வழியாக சென்றுக்கொண்டிருந்த போது நீட் தேர்வு காரணமாக உயிரை மாய்த்துக்கொண்ட அரியலூர் மாணவி அனிதா குடும்பத்தினர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து கொட்டாரம் காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து மதியம் சுசீந்திரத்தில் உள்ள பள்ளியில் மதிய இடைவேளைக்குப் பின்பு, மாலையில் புறப்பட்டு இடலாக்குடி வழியாக கோட்டார் சந்திப்பில் இன்று நிறைவடைகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இன்று இரவு ஸ்காட் கல்லூரி வளாகத்தில் தங்கும் ராகுல் காந்தி, நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு சுங்கான்கடை, வில்லுக்குறி தக்கலை வழியாக முளகுமூடு நோக்கி நடைப்பயணம் மேற்கொள்கிறார். 10-ம் தேதி இரவு அன்று தமிழக கேரள எல்லையான செறுவாரக் கோணத்தில் நிறைவடையும் நடை பயணம் பதினொன்றாம் தேதியிலிருந்து நடைபயணம் கேரளாவிற்குள் நுழைகிறது.

இந்த நடை பயணத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.