தமிழகத்தில் ஹரிசான்டல் ஒதுக்கீட்டு முறை, வெர்டிக்கல் ஒதுக்கீட்டு முறை எனப்படும் இருவேறு முறைகளையும் பின்பற்றி பலத்தரப்பட்ட அரசு பணிகளுக்கான ஒதுக்கீடு பொதுவாக கணக்கிடப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு என்ற சட்டம் தமிழகத்தில் இயற்றப்பட்டது.
அதன்படி தற்போதைய நடைமுறையில் தமிழக அரசு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகும்போது, ஹரிசான்டல் ஒதுக்கீடு முறையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடும், வெர்டிக்கல் ஒதுக்கீடு முறையில் சமூகப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடும் கணக்கிடப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இவ்வாறு பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு தவிர்த்து மீதமுள்ள 70 சதவீதப் பணிகளுக்கும் பொதுப்பிரிவில் ஆண்கள், பெண்கள் என இரு பாலினத்தவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இதனால் அரசு வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டு முறையில் சில பாகுபாடு உள்ளதென பொது மக்கள் தரப்பில் பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய நடைமுறையை சீர்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வந்தது.
இந்நிலையில் சத்தீஸ்வரன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு, முதலில் பெண்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் 30 சதவீத பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கி விட்டு, அதன்பின் சமுதாய ரீதியிலான இடஒதுக்கீட்டை பின்பற்றும் நடைமுறையை தமிழக அரசும், அரசுப் பணியாளர் தேர்வாணையமும் பின்பற்றுவது துரதிருஷ்டவசமானது என குறிப்பிட்டனர்.
மேலும், அறிவிப்பு வெளியாகும் முன்பே பெண்களுக்கான ஒதுக்கீட்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வராமல், நியமனத்தின்போது 30 சதவீதத்திற்கும் குறைந்த பெண் போட்டியாளர்கள் தேர்வாகும் பட்சத்தில் மட்டும் தனிபட்ட முறையில், பெண்களுக்கான 30 சதவீத ஒதுக்கீட்டு சட்டம் பின்பற்றப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஒருவேளை நியமனத்தின் போது பெண்கள் 30 சதவீதத்திற்கும் அதிகமாக தேர்வாகியிருந்தால், இந்த பெண்களுக்கான ஒதுக்கீட்டு சட்டத்தை பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த முக்கிய மாற்றம் அமலுக்கு வரும்பட்சத்தில், பெண்களுக்கான அரசு வேலை வாய்ப்பில் சற்று குறுகலான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.