வேல்ஸ் புதிய இளவரசர் மற்றும் இளவரசியாக வில்லியம் மற்றும் கேட் ஆகியோரை அறிவித்தார் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ்.
ஹாரி மற்றும் மேகன் இருவருக்கும் எனது அன்பை வெளிப்படுத்த விரும்புகிறேன் என மன்னர் அறிவிப்பு.
வில்லியம் மற்றும் அவரது துணைவியார் கேட் ஆகியோரை வேல்ஸின் புதிய இளவரசர் மற்றும் இளவரசியாக பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் அறிவித்தார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து, பிரித்தானியா உட்பட 14 நாடுகளுக்கு புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் தனது தாய் மற்றும் நாட்டின் மகாராணி உயிரிழந்த பிறகு, மன்னராக மூன்றாம் சார்லஸ் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினார்.
இந்த உரையில் தனது மாட்சிமையின் வாரிசாக அவரது மூத்த மகன் வில்லியம் மற்றும் மருமகள் கேட் ஆகிய இருவரையும் வேல்ஸின் இளவரசர் மற்றும் இளவரசியாக மன்னர் மூன்றாம் சார்லஸ் அறிவித்தார்.
மேலும் தனது வாரிசாக வில்லியமை வேல்ஸ் இளவரசராக ஆக்குவதில் பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் இந்த ஜோடி தேசிய உரையாடல்களை தொடர்ந்து ஊக்குவித்து வழிநடத்துவார்கள், விளிம்பு நிலை மக்களை மையத்திற்கு கொண்டு வர உதவுவார்கள் என தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசிக்கான பட்டத்தை தற்போதைய மன்னர் சார்லஸ்-ஸூம் அவரது மறைந்த மனைவி டயானாவும் வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கேத்ரின்(கேட்) வேல்ஸ் இளவரசி என்ற பாத்திரத்துடன் தொடர்புடைய வரலாற்றைப் பாராட்டினார், ஆனால் அவர் தனது சொந்த பாதையை உருவாக்கும் போது புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எதிர்காலத்தைப் பார்க்க விரும்புவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னரின் உரையில், ஹாரி மற்றும் மேகன் வெளிநாட்டில் தங்களின் வாழ்க்கையை தொடர்ந்து கட்டியெழுப்புவதில் அவர்களுக்கும் எனது அன்பை வெளிப்படுத்த விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.