போபால்: மத்திய பிரதேசத்தில் நண்பரின் ஆசனவாய்க்குள் ஏர் கம்ப்ரஸரை (காற்றடிக்கும் கருவி) சொருகியதில் இளைஞர் பரிதாபமாாக உயிரிழந்தார்.
சில சமயங்களில் நாம் விளையாட்டாக நினைத்து செய்யும் விஷயங்கள் விபரீதத்தில் முடிந்துவிடும். இதனால் தான், விளையாட்டு வினையாகும் என பெரியவர்கள் அடிக்கடி கூறுவதை நாம் பார்த்திருப்போம்.
இவ்வாறு விளையாட்டுக்காகவும், வேடிக்கைக்காகவும் செய்த பல விஷயங்கள் ஆபத்தாக மாறியதை பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்.
வினையான சம்பவங்கள்
உதாரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் 12-ம் வகுப்பு மாணவனை அவனது நண்பர்கள் அடித்ததில் சம்பவ இடத்திலேயே அவன் உயிரிழந்தான். அதேபோல, நீச்சல் தெரியாத தனது நண்பனை விளையாட்டாக ஏரிக்குள் இழுத்ததில் அவர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திலேயே நடந்தது.
தற்போது அப்படியொரு சம்பவம்தான் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
மாவு மில்லில் வேலை
மத்திய பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாலு சிங் தாக்குர் (25). இவர் அங்குள்ள மாவு மில்லில் வேலை செய்து வந்தார். தினமும் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் முன்பு, தனது உடலில் இருக்கும் மாவு பவுடரை அங்குள்ள ஏர் கம்ப்ரஸில் அடித்து சுத்தம் செய்வது வழக்கம்.
ஏர் கம்ப்ரஸர் என்பது காற்றை வேகமாக பீய்ச்சி அடிக்கும் கருவி என்பதால், அதில் இருந்து வெளியேறும் காற்று எளிதில் தூசி போன்ற பொருட்களை அகற்றிவிடும்.
நண்பனிடம் கொடுத்து…
அந்த வகையில், நேற்று மாலை வேலை முடித்த பின்பு ஏர் கம்ப்ரஸரை அடித்து தனது உடலை லாலு சிங் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பரான கப்பார் கோல் (24) அங்கு வந்திருக்கிறார்.
இதையடுத்து, கப்பாரிடம் ஏர் கம்ப்ரஸை கொடுத்த லாலு சிங், தனது முதுகில் இருக்கும் மாவு தூசுகளை சுத்தம் செய்யுமாறு கூறினார்.
எமனான விளையாட்டு
இதன்பேரில், ஏர் கம்ப்ரஸரை வாங்கிக் கொண்ட கப்பார், அவர் முதுகில் இருக்கும் தூசுகளை சுத்தம் செய்தார். அப்போது விளையாட்டாக திடீரென லாலு சிங்கின் ஆசனவாய்க்குள் ஏர் கம்ப்ரஸரை சொருகி காற்றை அடித்தார். இதில் சில நொடிகளிலேயே லாலு சிங் சுருண்டு விழுந்தார். இதை பார்த்த கப்பார், உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் லாலு சிங் உயிரிழந்தார்.
கைது நடவடிக்கை
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், மாவு மில்லுக்கு வந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், வேடிக்கைக்காக கப்பார் செய்த காரியம் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, லாலு சிங் உயிரிழந்ததை இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்த போலீஸார், கப்பாரை கைது செய்தனர்.