மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜா, நேற்று வீடு திரும்பினார். இன்று காலை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
இயக்குநர் பாரதிராஜா, சில வாரங்களுக்கு முன்னர் திடீரென உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரை திரையுலக பிரபலங்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை முடிந்து நேற்று மாலை வீடு திரும்பினார். இன்று காலை அவரை முதல்வர் நலம் விசாரித்தது குறித்து மனோஜ் பாரதியிடம் பேசினேன்.
“ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. முதல்வரும் அப்பாவும் நல்லா கலகலன்னு பேசிட்டு இருந்தாங்க. ‘கூடிய சீக்கிரம் நீங்க பூரண நலம் பெறணும். உங்களை என் அலுவலகத்தில் நான் மீண்டும் வரவேற்க வேண்டும்’ன்னு சி.எம்.சார் சொல்லியிருக்காங்க. அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டது அவ்வளவு அருமையா இருந்தது. அவங்களுக்குள்ள புரிதல், நட்பு ரொம்ப அழகா இருந்துச்சு. சி.எம். சாரை நான் நேர்ல சந்திச்சிருக்கேன், பேசியிருக்கேன். அதைப் போல அப்பாவும் அவங்களை அடிக்கடி சந்திச்சு பேசியிருக்காங்க. ஆனா, அவங்க ரெண்டு பேரும் நேர்ல சந்திக்கறதை நான் இன்னிக்குத்தான் பார்க்கறேன். வீட்ல எல்லாருமே ஹேப்பி!” என்றவரிடம் பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து கேட்டோம்.
“அப்பா நல்லா இருக்காங்க. பிசியோதெரபி கொஞ்சம் பண்ணச் சொல்லியிருக்காங்க. மருத்துவர்கள் அப்பாவை நல்லா கவனிச்சுக்கிட்டாங்க. அதேபோல அப்பாவுக்கான மருத்துவச் செலவுகளை எங்க வங்கி கணக்கில இருந்துதான் செலவு பண்ணியிருக்கோம். நாங்க பணக்கஷ்டத்துல இருக்கறதா வந்த தகவல்கள் உண்மையில்லை” என்றார்.
சில வாரங்கள் ஓய்விற்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்கிறார் பாரதிராஜா.