பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 13 பேரின் உடல்நிலை மிக மோசமான நிலையில் உள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகள் 13 பேரும் தங்களது விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டம்
“இராணுவ புலனாய்வு பிரிவினரால் பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவர்கள் சிறைகளிலே அடைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களுக்கு எதிராக எவ்விதமான வழக்குகளும் பதியப்படாமல் வழக்குகளுக்கான திகதிகளும் அறிவிக்கப்படாத நிலையில் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழர் என்ற காரணத்திற்காக தான் அவர்கள் இவ்வாறு பழிவாங்கப்படுவதாகத்தான் நாங்கள் கருதுகின்றோம்.
இதில் பழைய அரசியல் கைதிகள் மற்றும் புதிதாக கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழ் இளைஞர்கள் இருகின்றார்கள்.
தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்
தற்போது உண்ணாவிரதம் இருக்கின்ற 13 பேரின் உடல் நிலை மிக மோசமான நிலையை எட்டிக்கொண்டிருக்கின்றது.
எனவே அவர்களுக்கு உயிர் ஆபத்தும் ஏற்படும் நிலையில் உள்ளது.
எனவே சம்மந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனவும் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.