சேலம்: திமுக உடனான கூட்டணியில் இருந்து என்னை பிரிக்க சூழ்ச்சி நடப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், எம்எல்ஏ-வுமான வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார்.
இந்தக் கூட்டத்தில் வேல்முருகன் பேசுகையில், மத்திய அரசின் செயல்பாட்டால் நாட்டில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
சுங்கக்காவடிகள்
மத்திய அரசால் பணக்காரர்கள் மட்டும்தான், மேலும் பணக்காரர்களாக மாறி வருகின்றனர். மாநில உரிமைகளை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. நீட் தேர்வால் தமிழகத்தில் மருத்துவம் படிக்க முடியாத சூழல் உருவாகி வருகிறது. மேலும் புதிய கல்வி கொள்கையை திணித்து வருகின்றனர். தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தொகுதிக்காக மட்டும் தொடங்கிய மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை தமிழகம் முழுவதும் பரவலாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல உயிர்களை கொல்லும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
தமிழக அரசுக்கு தடுமாற்றம் ஏன்?
மதுபானக் கடைகளை படிப்படியாக மூட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும், எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிராக தங்களோடு திமுகவும் எதிர்த்து போராட வேண்டும். எட்டுவழிச் சாலை விவகாரத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஏன் தடுமாற்றம் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
மக்கள் பிரச்னைகள்
தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்தாலும் நமது மண்ணிற்கான உரிமைகளை கேட்க ஒருபோதும் அச்சப்படமாட்டோம். நமது கோரிக்கைகளை வலியுறுத்தினால் கூட்டணியிலிருந்து குதர்க்கமாக பேசுகிறேன் என்கிறார்கள். முதலமைச்சருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும். அவ்வப்போது மக்கள் பிரச்னைகளை நினைவுப்படுத்தும் வேலையை கூட்டணியில் இருந்து செய்வேன் என்று தெரிவித்தார்.
ஆளுநர் மீது விமர்சனம்
அதேபோல், ஆட்சியாளர்களிடமிருந்து என்னை பிரிக்க சங்பரிவார் சூழ்ச்சி செய்கின்றனர். தமிழக முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வந்த ஆளுநரே காரணம் என்று குற்றம்சாட்டினார்.