ஐதராபாத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி லட்டு மூலம் விநாயகர் சிலை தயாரிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நகருக்கு வெளியில் உள்ள பாலாப்பூர் என்ற இடத்தில் 21 கிலோ எடை லட்டு மூலம் விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது.
விநாயகர் சிலை கரைப்பின் இறுதி நாளான நேற்று லட்டு கணபதி ஏலத்திற்கு வந்தது. இந்த ஏலத்தில் 9 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் மூன்று பேர் வெளியூரிலிருந்து ஏலம் கேட்க வந்திருந்தனர். கடந்த ஆண்டு 18.90 லட்சத்திற்கு ஏலம் போன லட்டு விநாயகர், இந்த ஆண்டு 24.60 லட்சத்திற்கு ஏலம் போனது. இந்த ஆண்டு லட்டு கணபதியை லட்சுமண ரெட்டி என்ற தொழிலதிபர் ஏலம் எடுத்தார். லட்டு கணபதி தங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம், ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்பைக் கொண்டுவருவதாக உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள். எனவே ஒவ்வொரு ஆண்டும் இக்கணபதியை ஏலம் எடுக்க அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த 1994ம் ஆண்டு முதல் இந்த லட்டு கணபதி ஏலம் நடந்து வருகிறது. முதன் முதலில் 450 ரூபாய்க்கு ஏலம் போனது. முதன் முதலில் மோகன் ரெட்டி என்பவர் இந்த கணபதியை ஏலம் எடுத்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக அவரே ஐந்து ஆண்டுகள் ஏலம் எடுத்தார். அதன் மூலம் அவருக்கு ஏராளம் செல்வம் பெருகியதாக நம்பப்படுகிறது. லட்டு கணபதியை வாங்குபவர்கள் அதனைத் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்குக் கொடுப்பதோடு, எஞ்சியவற்றை விவசாய நிலத்தில் போடுவது மற்றும் வீட்டில் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கம்.