புதுடெல்லி: “உலகலாவிய கண்டுபிடிப்புகளின் மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய – மாநில அறிவியல் மாநாடு குஜராத்தின் அகமதாபாத் நகரில் இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை டெல்லியில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து பிரதமர் உரையாற்றினார். அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதை நோக்கமாகக் கொண்டு முதல் முறையாக இத்தகைய மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரைள்: “அறிவியலின் அடிப்படையில் நாடு முன்னேற்றம் காண மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முதலீடுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. இதனால், கண்டுபிடிப்புகளுக்கான உலக தரவரிசைப் பட்டியலில் கடந்த 2015-ம் ஆண்டு 81-வது இடத்தில் இருந்த இந்தியா, 2021ல் 46-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
நான்காவது தொழில் புரட்சியை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கான இந்தியாவின் முனைப்பு வெற்றி பெற, அறிவியல் முன்னேற்றமும் அறிவியலுடனான மக்களின் நெருக்கமும் மேலும் அதிகரிக்க வேண்டும். தீர்வுகள், வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையாக அறிவியல் உள்ளது. மேற்கத்திய நாடுகளில் ஐன்ஸ்டீன், ஃபெர்மி, மாக்ஸ் பிளாங்க், நீல்ஸ் போர், டெல்சா போன்ற விஞ்ஞானிகள் தங்களின் பரிசோதனைகள் மூலம் உலகத்தை வியப்படையச் செய்தனர். இதே காலத்தில் சி.வி.ராமன், ஜெக்தீஷ் சந்திர போஸ், சத்யேந்திரநாத் போஸ், மேக்நாத் சாகா, எஸ் சந்திரசேகர் உள்ளிட்ட பல இந்திய விஞ்ஞானிகள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை முன்னிலைக்குக் கொண்டுவந்தனர்.
நமது நாட்டு விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும். நமது விஞ்ஞானிகளைக் கொண்டாடுவதற்கு போதிய காரணங்களை நாட்டுக்கு அவர்கள் தந்துள்ளனர். கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்ததிலும், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை வெற்றி பெறச் செய்ததிலும் இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பு மகத்தானது.
நமது இளம் தலைமுறையின் டிஎன்ஏ-வில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு ஆர்வம் உள்ளது. இளைய தலைமுறைக்கு முழு பலத்துடன் நாம் ஆதரவு தருவது அவசியம். இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்பு உணர்வுக்கு ஆதரவாக ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு துறையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விண்வெளி இயக்கம், தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கம், செமிகண்டக்டர் இயக்கம், ஹைட்ரஜன் இயக்கம், ட்ரோன் தொழில்நுட்பம் போன்றவை இந்த நோக்கிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தாய்மொழியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதன் மூலம் தேசிய கல்விக் கொள்கை இதனை மேலும் ஊக்கப்படுத்துகிறது.
இந்த அமிர்தக் காலத்தில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பின் உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதற்கு பல முனைகளில் ஒரே நேரத்தில் நாம் பணியாற்ற வேண்டியுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சியை உள்ளூர் நிலையில் கொண்டு செல்ல வேண்டியது மிகவும் அவசியம். ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மாநிலங்கள் தங்களின் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்திக் கொள்ள வேண்டும். கூடுதலாக அறிவியல் நிறுவனங்களை உருவாக்குவதற்கும் மாநிலங்கள் முன்வர வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசினார்.