‘கலைஞர் நூலக அக்கறையை மதுரை எய்ம்ஸில் ஸ்டாலின் காட்டவில்லை’: ஆர்.பி உதயகுமார்

திருமங்கலம் தொகுதியின் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், டி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை போக்க டேராபாறை அணை கட்ட வேண்டும்.

மேலும், திருமங்கலம் நகர்ப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் விரைந்து அமைக்க வேண்டும், கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் திருமங்கலம் தொகுதியின் எம்.எல்.ஏ வும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்பி உதயகுமார், “

செங்கலை காட்டி மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த திமுக தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை.

எய்ம்ஸ் பணிகள் கிடப்பில் போட்ட கல்லாக உள்ளது. கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.

அதிமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகை திட்டத்தில் 37 லட்சம் முதியோருக்கு 4300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு முறையாக வழங்கப்பட்டது.

முதியோர் உதவி தொகையை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக தேர்தல் நேரத்தில் அறிவித்த திமுக தற்பொழுது முதியோர் உதவித்தொகையை ரத்து செய்து வருவது வேதனை அளிக்கிறது.
மதுரை வளர்ச்சிக்காக திமுக அரசு இதுவரை ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

முதல்வர் மதுரை மக்களை உண்மையாக நேசிப்பவராக இருந்தால் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் மதுரைக்கு செயல்படுத்திய திட்டங்கள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும்.

ஆனால், முதல்வர் விழா நாயகனாக உள்ளார். விழாவில் பங்கேற்கும் பயணிகளுக்கு எந்த பயனும் இல்லை

மதுரையில் கருணாநிதி பெயரில் அமைக்கப்படும் நூலகத்திற்கு பல முறை வருகை புரிந்த முதல்வர் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை ஒரு முறை கூட பார்வையிடவில்லை.

தமிழகத்தில் வலம் வரும் முதல்வரால் சாமானிய மக்களின் வாழ்வை வளம்படுத்த இயலவில்லை என்பது நிதர்சனம்.

முதல்வர் ஏளனம் செய்வது எடப்பாடி பழனிச்சாமியை அல்ல, அதிமுகவிற்கு வாக்களித்த மக்களை ஏளனம் செய்கிறார்.

முதல்வர் எதிர்கட்சியையும் எதிர்க்கட்சி தலைவரையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்கட்சியை மதிக்காதவர் எப்படி மக்களை மதிப்பார் எனத் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.