குன்னூர்: குன்னூரில் இருந்து மேட்டுபாளையம் நோக்கி சென்ற ஸ்கார்பியோ வாகனம், காட்டேரி பூங்கா அருகே கே.எம்.எஸ். கடை வளைவில் சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
படுகாயமடைந்த கடை உரிமையாளர் ரஞ்சித்குமார் மற்றும் காரில் பயணித்தவர்கள், குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்த ராபின், முனீஸ்வரராவ் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதுகுறித்து குன்னூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “கேரள மாநிலம் பாலக்காடு வடக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த ராபின், முனீஸ்வர ராவ் உட்பட 9 பேர், நீலகிரி மாவட்டம் உதகைக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர். அதே பகுதியை சேர்ந்த ஏ.எஸ்.முகமது சஞ்சித் (19) என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் முழுவதும் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு உதகையில் தங்கினர். பின்னர், அங்கிருந்து நேற்று காலை புறப்பட்டனர். குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை காட்டேரி பூங்கா அருகே, முன்னாள் சென்ற பேருந்தை முந்துவதற்காக கார் வேகமாக சென்றுள்ளது.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்றதுடன், சாலையில் கவிழ்ந்து அருகே இருந்த தேநீர் கடைக்குள் புகுந்தது. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தேநீர் கடை உரிமையாளர் ரஞ்சித் குமார் மற்றும் காரில் இருந்த 9 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு குன்னூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் நெடுஞ்சாலைத் துறை ரோந்து போலீஸார் சென்று, அவர்களை மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில், கார் ஓட்டி வந்த முகமது சஞ்சித், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த ராபின், முனீஸ்வரராவ் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.
இந்த விபத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் இருந்த வாகனங்களை போலீஸார் சரி செய்து அனுப்பினர்.