பானாஜி: கோவாவில் உள்ள எனது 2 சொத்துக்களை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அபகரித்து விட்டதாக இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேனின் தந்தை புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இங்கிலாந்தின் பிரதமர் பதவியில் இருந்து போரீஸ் ஜான்சன் விலகியதை அடுத்து, நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டார்.
லிஸ் டிரஸ் பிரதமரானதும் உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரித்தி படேல் தனது பொறுப்பில் இருந்து விலகினார்.
சுயெல்லா பிரேவர்மேன்
இதையடுத்து இங்கிலாந்து புதிய உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த
சுயெல்லா பிரேவர்மேன்(வயது 42) தேர்வு செய்யப்பட்டார். இவரது தாய் லண்டனில் பிறந்தவரும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான உமா. தந்தை கோவா வம்சாவளியை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ். இங்கிலாந்தின் பர்ஹம் தொகுதி எம்.பியான சுயெல்லா பிரேவர்மேன், அந்நாட்டின் அரசு வழக்கறிஞராக பணியாற்றி இருக்கிறார்.
அடையாளம் தெரியாத மர்ம நபர்கள்
உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேனின் தந்தை கிறிஸ்டி பெர்னாண்டஸ், கோவாவில் தனது மூதாதையர்களுக்கு சொந்தமான இரண்டு சொத்துக்களை மர்ம நபர்கள் அபகரித்துவிட்டதாக புகார் தெரிவித்து இருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்திடம் தனது புகாரை பதிவு செய்துள்ளார். கிறிஸ்டி பெர்னாண்டஸ், தனது புகாரில் கோவாவின் அசாகாவோ பகுதியில் தனது மூதாதையர்களுக்கு சொந்தமாக 13,900 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு சொத்துக்கள் இருந்ததாகவும் இதை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அபகரித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு சொத்துக்கள்
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், ”கிறிஸ்டி பெர்னாண்டஸ் தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் சொந்தமாக கோவாவில் அசாகாவோ கிராமத்தில் சர்வே எண்கள் 253/3 மற்றும் 252/3 என்ற இரண்டு சொத்துக்கள் இருந்ததாகவும் இவற்றை பவர் ஆஃப் அட்டர்னி மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் அபகரித்துவிட்டதாகவும் தனது புகாரை முதல்வரிடம் தெரிவித்து இருக்கிறார்” என்றனர்.
சிறப்பு விசாரணை குழு
இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சராக இருப்பவரின் தந்தை அளித்த அபகரிப்பு புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணையை முடுக்கி விட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவாவின் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஆணையர் நரேந்திர சவைகர் கூறுகையில், ”கிறிஸ்டி பெர்னாண்டஸ் மின்னஞ்சல் மூலமாக இந்த புகாரை அளித்துள்ளார். கடந்த வாரம் வந்த மின்னஞ்சல் உள்துறை அமைச்சகத்திற்கு பார்வேடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
100-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள்
நில அபகரிப்பு புகார்கள் காரணமாக இந்த ஆண்டு துவக்கத்தில் போலீஸ் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை கோவா அரசு அமைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு புலனாய்வு குழு இதுவரை 100-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் குறித்து விசாரணை நடத்தியுள்ளது. மோசடியில் ஈடுபட்டதாக 15 க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் காப்பகங்கள் மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளும் அடங்குவர்.