லக்னோ: சமூக வலைதளம் மூலம் ஸ்டைல் போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட 2 பெண் காவலர்களை உத்தரபிரதேச போலீசார் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்த பெண் காவலர்கள் இருவர், சீருடை அணிந்தவாறு ஸ்டைலாக போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். சுமார் 15 வினாடிகள் ஓடக்கூடக் கூடிய அந்த வீடியோக்களை மாநில காவல் துறை அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அதையடுத்து போலீஸ் ஏடிஜி ராஜ்குமார், மேற்கண்ட இரண்டு பெண் காவலர்களையும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாநில காவல் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘சீருடை அணிந்த எந்த போலீஸ்காரரும் இதுபோன்ற வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடக்கூடாது. உத்தரவை மீறி புகைப்படமோ, வீடியோ வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சீருடை மட்டுமின்றி, எந்த ஒரு காவலரும் துப்பாக்கி உள்ளிட்ட காவல் துறை ஆயுதங்களை வைத்துக் கொண்டு புகைப்படம் அல்லது வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடாது. ஏற்கனவே இதுபோன்ற புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தால், அதனை உடனடியாக நீக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.