கோவை டவுன்ஹால் பகுதியில் பெரிய கடைகள் முதல் நடைபாதை கடைகள் வரை என ஏராளமான கடைகள் உள்ளன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலை. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையாக உள்ளது. கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி பகுதியில் 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சிறு வியாபாரிகள் அதிகம் உள்ளனர்.
இந்தநிலையில், அப்பகுதி கடை உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்களை நிறுவுவதற்கு முயற்சி மேற்கொண்டனர். 16 சிசிடிவி கேமராக்கள் வாங்கி மாநகர காவல்துறையிடம் வழங்கினர். இதையடுத்து அப்பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டது. சிசிடிவி கேமரா கண்காணிப்பு பணியை ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “தீபாவளி பண்டிகை நெருங்கி வர உள்ளது. கோவை மாவட்டத்தின் முக்கிய இடங்களான உக்கடம், டவுன்ஹால், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் தற்போது இருந்தே வரத் தொடங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்டக்கூடும். காவல்துறையும் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் சிசிடிவி கேமரா பயன்பாடு மிகவும் முக்கியமாகும். இதில் பதிவாகும் காட்சிகளை வைத்து திருடர்களையும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களையும் உடனடியாக பிடிக்க முடியும்.
இங்கு சிறு வியாபாரிகள் ஒன்றிணைந்து கேமரா வழங்கியது வரவேற்கத்தக்கது. காவல்துறைக்கு மிகவும் உதவியாக உள்ளது.
இதேபோல் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வியாபாரிகளும் தாங்களாகவே முன்வந்து தங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த உதவ வேண்டும். பண்டிகை காலங்களில் குற்ற சம்பவங்களை தடுக்க மிகவும் உதவியாக இருக்கும்” என்றார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“