நகன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்ரா நடை பயணம் மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி பல்வேறு குழுக்களை சந்தித்து வருகிறார். நேற்று புலியூர்குறிச்சி பகுதியில் மதியம் ஓய்வெடுத்த ராகுல் காந்தி அங்கு வைத்து பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் குழு, வில்லேஜ் குக்கிங் சேனல் டீம் மற்றும் தமிழ்நாட்டில் வித்தியாசமான செயல்கள் செய்த 12 ஊராட்சி மன்ற தலைவர்களையும் சந்தித்து உரையாடினார். இதில் கடலூர், நாகப்பட்டினம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களளை ராகுல் காந்தி சந்தித்தார். ராகுல் காந்தியை சந்தித்த தென்காசி மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஏபிடி மகேந்திரனிடம் பேசினோம், “தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்பட்ட 12 ஊராட்சி தலைவர்களை தேர்வு செய்து ராகுல் காந்தித்து உரையாடினார். நான் எனது சொந்த பணத்தில் 15 லட்சம் ரூபாய் செலவு செய்து இரண்டு கிராமங்ககுக்கு இடையேயான கிராமப்புற இணைப்புச் சாலை அமைத்தேன். அதனால் எனக்கும் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நான் ராகுல் காந்தியை பார்த்ததும் காலில் விழுந்து ஆசி பெற்றேன். காலில் விழ வேண்டாம் என என்னை தடுத்தவர், அடுத்தவர் காலில் விழக்கூடாது என்றார். நான் ஸ்கவுட் மாணவனாக இருக்கும்போது 1988-ல் உங்கள் தந்தை தமிழ்நாடு வந்தபோது அவர் மீது ரோஜா மலர் தூவினேன். அடுத்து உங்களை பாக்கிறேன் அதுதான் ஆசி பெற்றேன் என நான் தெரிவித்தேன். பின்னர், ஊராட்சி தலைவர்களுக்கு அதிகாரம் இல்லை. மாநில அரசு கிராமப்புற தலைவர்களுக்கு அதிகாரம் கொடுக்க மாட்டார்கள் என நான் தெரிவித்தேன். எங்கள் கருத்தை உன்னிப்பாக கவனித்த ராகுல் காந்தி கேள்வி கேட்கும் உரிமை உள்ளவனால் மட்டுமே அதிகாரத்தை பெற முடியும் நீங்கள் கேள்வி கேட்க பயந்தால் நல்ல ஊராட்சி தலைவராக இருக்க முடியாது என எங்களிடம் ராகுல் காந்தி கூறினார்” என்றார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் சிவராசு கூறுகையில், “மக்கள் தொகையில் 60% மக்கள் கிராமப்புறத்தில் உள்ளதாகவும், 97 சதவீதம் நிலம் உள்ளாட்சி பகுதிகளில் உள்ளது. அதனால் ஊராட்சி பகுதிகள் மேம்பட வேண்டும் என ராகுல்காந்தி எங்களிடம் கூறினார். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உரிய அதிகாரம் வழங்கவில்லை. போதிய நிதி ஆதாரமும் தேவையான ஊழியர்களும் இல்லை. கேரளா போல உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தியிடம் நான் கோரிக்கை வைத்தேன்” என்றார்.
ராகுலை சந்தித்த கடலூர் மாவட்டம் அருகூர் ஊராட்சி தலைவர் ராஜா நம்மிடம் பேசுகையில், “ஆட்சியாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்திப்பதற்கு வாய்ப்புகள் தருவதில்லை என்ற நிலையில் ராகுல் காந்தி எங்களை அழைத்து கலந்துரையாடியது மகிழ்ச்சியாக உள்ளது. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி பேசும் ஆட்சியாளர்கள் உள்ளாட்சிகளுக்கு முழு அதிகாரம் தருவதில்லை. கிராம சபா கூட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்து அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் தகுந்த திட்டம் வகுக்குமாறு ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்தேன்” என்றார்.