சென்னை: சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் துறை சார்பில்,தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்களுக்கான பயிற்சி முகாம், ரிப்பன்மாளிகை வளாகத்தில் நடைபெற்றது.
தூய்மை இந்தியா திட்டத்தின் 198 பரப்புரையாளர்கள், 15 மேற்பார்வையாளர்கள், மண்டல செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது:
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை,நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் (MCC), உயிரி எரிவாயு மையங்கள் மற்றும் தோட்டக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மக்காத குப்பை, மறுசுழற்சிக்குஉட்படுத்தப்படுகிறது. குப்பையைவகை பிரித்து அனுப்புவதன் மூலம்கிடங்குக்கு நாள்தோறும் அனுப்பப்படும் குப்பையின் அளவு குறையும். நகராட்சியின் சுகாதாரம் மேம்படும்.
மாநகராட்சி சார்பில் அண்ணாநகர் மண்டலம் சேத்துப்பட்டு பகுதியில் உயிரி எரிவாயு மையம் (Bio CNG) செயல்பட்டு வருகிறது. இங்கு மக்கும் குப்பையின் ஈரக்கழிவுகள் மூலம் உயிரிஎரிவாயுவாகவும் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதேபோல் கொடுங்கையூர், மாதவரம் பகுதிகளில் உயிரி எரிவாயு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சியின் 2 இடங்களில் உயிரி எரிவாயு மைய அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உயிரி எரிவாயு மையங்களிலுக்கு குப்பையை அனுப்பும்போது, அதை முறையாக வகை பிரித்து அனுப்ப வேண்டும். இல்லையெனில் இந்த உயிரி எரிவாயு மையங்களின் செயல்பாடு பாதிக்கப்படும்.
பொதுமக்களுக்கு மக்கும் குப்பை,மக்காத குப்பை குறித்த எடுத்துக்காட்டுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், சிறப்பாக பணிபுரியும் பரப்புரையாளர்களுக்கு மாதந்தோறும் விருதுகள் வழங்கப்படும்.
இவ்வாறு ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், தலைமை பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) ந.மகேசன், மாநகர சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.