சென்னை: தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த சண்முகம் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.
சன் டிவியில் தனது கணீர் குரலில் பொறுமையாக அழகிய தமிழ் உச்சரிப்பின் மூலம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தொகுப்பாளர் சண்முகம். மதுரையை பூர்விகமாக கொண்ட இவர், பத்திரிக்கை நிருபராக தனது ஊடக பணியை தொடங்கியவர், தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். தொகுப்பாளர் பணியில் இருந்து விலகி சில காலங்களாக பேச்சாளராக தொடர்ந்து செயலாற்றி வந்தார். 90களில் பிறந்த இளைஞர்களுக்கு இவரின் குரல்வளம் பேவரைட் ஆன ஒன்று.
இதனிடையே, இன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். அவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “தனது தனித்த குரல்வளத்தால் தமிழ் இல்லங்கள் தோறும் எதிரொலித்த ஊடகவியலாளர் . சண்முகம் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். கால் நூற்றாண்டுக்கும் மேலான தனது ஊடகப் பயணத்தில், கணீர் குரல் – ஒழுங்கான வாசிப்பு – துல்லியமான உச்சரிப்பு என்று, செய்தி வாசிப்பில் அவர் இலக்கணமாய்த் திகழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.
அவரது மறைவு ஊடக உலகிற்குப் பேரிழிப்பு. அவரது பிரிவால் வாடும் ஊடக நண்பர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.