ஜடேஜாவின் இந்த நடவடிக்கை எங்களுக்கு மகிழ்ச்சியாக இல்லை – பிசிசிஐ

துபாய்,

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பை தொடரில் விளையாடியபோது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். காயம் அதிகரித்ததை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து அவர் முழங்கால் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். சமூக வலைதள பக்கத்தில் தான் மருத்துவமனையில் இருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த ஜடேஜா, அதில், தனக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்று தெரிவித்திருந்தார். மேலும் பிசிசிஐ, சக வீரர்கள், பிசியோ மருத்துவர்கள், ரசிகர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

காயத்தில் இருந்து விரைவில் குணமடைந்து பயிற்சியை தொடங்கி அணிக்கு திரும்ப முயற்சிப்பேன் என்றும் அவர் கூறினார். எனினும், அவர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரில் விளையாடுவது சந்தேகம் தான்.

ஜடேஜாவின் முழங்கால் காயம் அணியின் பலத்தை தொந்தரவு செய்துள்ளது. மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) மகிழ்ச்சியையும் குலைத்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ கூறும்போது, “ஜடேஜாவின் காயத்தில் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை, அவர் சாகச செயல்களைச் செய்யும்போது உலகக் கோப்பையை மனதில் வைத்திருந்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் பொறுப்பேற்கவில்லை, உலகக் கோப்பை வரும் என்று நினைக்கவில்லை. ஜடேஜாவின் இந்த நடவடிக்கை எங்களுக்கு மகிழ்ச்சியாக இல்லை” என்று தெரிவித்துள்ளது. ஜடேஜா இந்த ஆண்டு ஒன்பது டி20 போட்டிகளில், எட்டு இன்னிங்ஸ்களில் 50.25 சராசரியில் 201 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் இந்த ஆண்டு அவரது சிறந்த தனிநபர் ஸ்கோர் 46* ஆகும். இது தவிர, அவர் 1/15 என்ற சிறந்த எண்ணிக்கையுடன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.