கிருஷ்ணகிரி: ஜெகதேவி அருகே வண்ணார் மடுவு ஆற்றினை, கிராம மக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். இங்கு தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஜெகதேவி ஊராட்சியில் குஜ்ஜிவகுத்தான் கொட்டாய், கொல்லக்கொட்டாய், இருளர் காலனி, வாத்தியார் கொட்டாய் உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.
இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது அத்தியாவசிய அடிப்படை தேவைகளுக்கும், பள்ளி, கல்லூரிக்கும் தங்கள் கிராமத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் நடந்து, ஜிட்டோபனப்பள்ளி கிராமத்தின் வழியாக கிருஷ்ணகிரி, மத்தூர், ஜெகதேவி, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.
இந்த ஒன்றரை கிலோ மீட்டர் செல்லும் சாலையின் குறுக்கே வண்ணார் மடுவு என்ற இடத்தில் ஆறு செல்கிறது. தற்போது பெய்த மழையால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றினை அச்சத்துடன் கடந்து வரும் அப்பகுதி மக்கள், தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, மழைக்காலங்களில் ஆற்றினை மிகுந்த அச்சத்துடன் கடந்து வருகிறோம். 1.5 கி.மீ தூரம் செல்ல வேண்டிய இடத்துக்கு, பாகிமானூர், சாப்பமுட்லு கிராமங்களின் வழியாக சுமார் 7 கி.மீ தூரத்துக்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லவும், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. இதனைப் போக்க ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
தற்போது ஆற்றில் 2 அடிக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் நாங்கள் ஒருவருக்கொருவர் கைகளை கோத்துக்கொண்டு ஆற்றினை கடந்து சென்று வருகிறோம்.
எனவே, ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.