தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் முற்றிலும் பாதிப்பு இல்லாத நிலை உருவாகவில்லை. தடுப்பூசி பணிகள் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டாலும், சில இடங்களில் பாதிப்பு பதிவாகி வருகிறது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அதன் தாக்கம் குறைவாக இருக்கிறது.
இந்நிலையில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமிக்கு கடந்த இரண்டு நாட்களாக லேசான காய்ச்சல், இருமல், சளி போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தன.
இதனால் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அமைச்சருக்கு கடந்த ஜனவரி மாதமும் கொரோனா பாதிப்பு உறுதியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சோதனையின் முடிவுகள் நேற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 436 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 72 ஆயிரத்து 802ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 87 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 43 பேருக்கும், கோவையில் 57 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 442 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.