சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்துள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இளநிலை மருத்துவம் பயில்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 1.32 லட்சம் பேர் தேர்வெழுதியதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 2020-ல் 57.44 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், 2021-ல் 54.40 சதவீதமாகவும், நடப்பாண்டு 51.30 சதவீதமாகவும் குறைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, நடப்பாண்டு தேசிய தர வரிசையில் முதல் 50 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இதையடுத்து, தமிழக எதிர்க்கட்சிகள் பலவும் ஆளும் திமுக அரசை விமர்சித்து வருகின்றன.
அந்த வகையில் செய்தியாளர் சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது, “தமிழக அரசுப் பள்ளிகளின் கல்வி தரம் என்பது மிகவும் தரம் குறைவாக உள்ளது. பள்ளிக் கல்வி தரத்தில் தென்னிந்தியாவில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது. இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இதுவரை வாய் திறக்கவில்லை. மாணவர்களின் கிரகிப்புத் தன்மை குறைந்திருக்கிறது. கேரளா, கர்நாடகா நம்மைவிட முன் சென்று விட்டன. இது குறித்தும் அமைச்சர் வாய்திறக்கவில்லை” என்று கூறியுள்ளார்.