மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியான இப்படத்தில் கமலுடன் ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தது. கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் கமலை இயக்கியிருக்கிறார் என்ற எதிர்பார்ப்போடு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி கேஜிஎஃப் 2, புஷ்பா என மற்ற மாநிலங்கள் படம் மட்டுமே தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற பேச்சையும் விக்ரம் மாற்றி வைத்தது.
உலக அளவில் பல கோடி ரூபாயை இப்படம் வசூலித்தது. இதனையடுத்து ஓடிடியிலும் வெளியாகி பலராலும் ரசிக்கப்பட்டது. படத்தை பார்த்த ரசிகர்கள் கமல் ஹாசன் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த வேண்டுமென்றும், லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனின் ரசிகர் என்பதை நிரூபித்துவிட்டார் எனவும் கூறினர்.
இந்தப் படம் ஓடிடியில் வெளியானாலும் இன்னும்கூட திரையரங்குகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் படம் 100 நாள்களை நிறைவு செய்திருக்கிறது. இதனையடுத்து விக்ரம் 100 நாள்கள் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து ரசிகர்கள் கமலுக்கும், லோகேஷ் கனகராஜுக்கும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் விக்ரம் 100 நாளையொட்டி நெகிழ்ச்சியுடன் பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் ஆடியோவில், “ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் நூறாவது நாளை எட்டியிருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.
#100DaysofVikram #VikramRoaringSuccess pic.twitter.com/7SjZIpTB6M
— Kamal Haasan (@ikamalhaasan) September 10, 2022
தலைமுறைகளைத் தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாகத் தழுவிக் கொள்கிறேன். விக்ரம் வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றி. தம்பி லோகேஷிற்கு என் அன்பும், வாழ்த்தும்” என குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.