திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட 13 துறைகளின் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்குதல், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் பேசிய அமைச்சர் வேலும், “13 துறைகளில் 3662 குடும்பங்களுக்கு 6.35 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளதுதான் அனைவருக்கும் சமமான ஆட்சி. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சி யாரையும் வஞ்சிக்காது. அனைவருக்கும் உதவி மட்டுமே செய்யும். ஏழை எளிய மக்கள், நடுத்தரம் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கும் அனைத்துத் திட்டங்களும் சென்றடையும் நோக்கில்தான் சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுவருகிறது.
தமிழகத்தின் தாயாக தமிழக முதல்வர் இருந்து புதுமைப் பெண் திட்டம், மகளிர் சுய உதவி குழு கடன் திட்டம், நகை கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி என பல்வேறு திட்டங்களை கொண்டுவருவதுதான் தமிழக முதல்வரின் எண்ணம்.
எந்தக் கட்சி என்று பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவாக நன்மை பயக்கும் வகையில் தமிழக அரசு இருக்கிறது. தமிழக மக்களுக்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழர்களின் ஆட்சி இது” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.