திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. இந்த நிலையில், திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் மலை பாதையில் மின்சார பஸ் இயக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை முதல்வர் ஜெகன் மோகன் அளித்துள்ளார்.
திருப்பதியில் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் தொடர்ந்து 9 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. பிரமோற்சவ விழாவின் முதல் நாள் ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரங்கள் சுவாமிக்கு காணிக்கையாக அளிக்கப்பட உள்ளது. அப்போது, மின்சாரப் பேருந்துகளை அவர் தொடங்கி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலெக்ர்டா நிறுவனத்தின் தயாரிப்பான இந்த பேருந்துகளை இயக்கும் நிர்வாக பொறுப்பு, ‘மெகா இன்ஜினியரிங்’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 36 இருக்கைகள், குளிர் சாதனம். சிசிடிவி கேமரா, தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகளை கொண்ட இந்த பேருந்துகளின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிமீ இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் பிரமோற்சவ விழாவில் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக மலைப்பாதையில் மாநில அரசு சார்பாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதியில் நேற்று 64,292 பேர் சாமி தரிசனம் செய்தனர். 30,641 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல் முறையாக ரூ.140.34 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. சாமி தரிசனத்துக்கு 18 மணி நேரமாவதாக கூறப்படுகிறது.